தமிழகத்தில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித் துறை அமைக்கக் கூடாது என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுஉள்ளது.
தமிழகத்தில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தாக்கலான மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தன.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது: தமிழகத்தின் நீர்நிலைகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. நீர்நிலைகளைப் பாதுகாக்க தனித்துறையை ஏற்படுத்தினால் என்ன? அது போல நடவடிக்கையை முன்னெடுக்காவிட்டால் நீர்நிலைகளைக் காப்பாற்ற முடியாது? மன்னர்கள் நீர் நிலைகளை உருவாக்கினர்.
தற்போது பல நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்பட்டுவிட்டன. இனிமேலாவது நீர் நிலைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் வருங்காலத் தலைமுறையினர் குடிநீருக்காகவும், விவசாயத்துக்காகவும் அல்லாடும் நிலை ஏற்படும்.
தமிழகத்தில் 1980-ல் ஆறு, குளம், ஏரி உட்பட எத்தனை நீர்நிலைகள் இருந்தன? தற்போது எத்தனை நீர்நிலைகள் உள்ளன? அரசு நீர் நிலைகளின் எல்லைகளை நிர்ணயம் செய்துள்ளதா? நீர் நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன? ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? தமிழகத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற ஏன் தனித்துறை அல்லது தனி அமைப்பை ஏற்படுத்தக்கூடாது? என்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
பின்னர், வழக்கு விசாரணையை நவ. 25-க்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.