தூத்துக்குடி உப்பளத் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பாக உப்பு உற்பத்தியாளர்கள் - தொழிற்சங்க பிரதிநிதிகள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டது. இதன்படி ஆண் தொழிலாளர்களுக்கு ரூ.5,300, பெண் தொழிலாளர்களுக்கு ரூ.4,975 போனஸ் வழங்கப்படு கிறது.
தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர் சங்கத்தினருக்கும், உப்புத் தொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் இடையே பாத்திக்காடு உப்பளத் தொழிலாளர்களுக்கு 2020-ம் ஆண்டுக்கு தீபாவளி போனஸ் வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை உப்புச்சங்கத்தில் வைத்து நடைபெற்றது.
உற்பத்தியாளர் சார்பில் சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கத்தலைவர் கிரகதுரை, செயலாளர் தனபாலன், எம்எல்எம் லட்சுமணன்,ரங்கனாதன், சந்திரமேனன்,உப்புத் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் சார்பில் தூத்துக்குடி மாவட்டஅண்ணா உப்பு தொழிற்சங்க தலைவர் குருசாமி, அருணாசலம், இந்திய தேசிய உப்பு தொழிலாளர் ஐக்கிய சங்கப் பொதுச்செயலாளர் பாக்கியராஜ், ஐஎன்டியுசி சங்கச் செயலாளர் ராஜு, சிஐடியு தொழிற்சங்கத் தலைவர் பொன்ராஜ், வேப்பலோடை மாடசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர். இதன் முடிவில் இருதரப்பினரும் ஏகமனதாக செய்து கொண்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தத்தின்படி 2020-ம் ஆண்டு குறைந்தபட்சம் முழு அளவுக்கு வேலைக்கு வந்த ஆண் தொழிலாளிக்கு ரூ. 5,300-ம், பெண் தொழிலாளிக்கு ரூ. 4,975-ம் போனஸாக வரும் 11.11.2020-க்குள் வழங்கப்பட வேண்டும். மேலும், 9 நாள் விடுமுறை சம்பளம், தொழிலாளர்களுக்கு கண்ணாடி, மிதியடி வகைக்கு ரூ.300 வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.