ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்ட தங்கக் கவசத்தை மதுரை வங்கியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஒப்படைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவுக்காக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 13 கிலோ தங்கக் கவசம் வழங்கியிருந்தார். இந்தத் தங்கக் கவசம் மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவுக்காக அதிமுக சார்பில் தங்கக்கவசம் வங்கியிலிருந்து எடுக்கப்பட்டு பசும்பொன் தேவர் நினைவு மண்டப நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்படும். தேவர் ஜெயந்தி விழாவில் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு விழா நிறைவடைந்ததும் மீண்டும் வங்கியில் ஒப்படைக்கப்படும்.
இந்த ஆண்டு, ஜெயந்திக்கு சமீபத்தில் வங்கியிலிருந்து தங்கக் கவசத்தை அதிமுக ஒருங் கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்து பசும்பொன் தேவர் நினைவு மண்டப நிர்வாகிகளிடம் வழங்கினார். விழா நிறைவு பெற்றதால் தங்கக் கவசம் மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை கொண்டு வந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திடம் வழங்கப்பட்டது. அதை அவர் மதுரை அண்ணா நகர் வங்கியில் ஒப்படைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.