சேலத்தில் மூதாட்டியை ஏமாற்றி 8 பவுன் நகையை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சேலம் கன்னங்குறிச்சி அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி பழனியம்மாள் (75). இவரது வீட்டின் அருகே கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடந்து வந்தது. இப்பணியில் ஈடுபட்ட இருவர், பழனியம்மாள் வீட்டில் செப்டிக் டேங்க் கட்டி தருவதாக கூறியுள்ளனர். மேலும், அவர்கள் பழனியம்மாளிடம் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
சமையலறைக்கு சென்று பழனியம்மாள் தண்ணீர் எடுத்துக் கொண்டு திரும்பியபோது இருவரையும் காணவில்லை.
அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ள பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் இருந்த 8 பவுன் நகையை இருவரும் திருடிச் சென்றது தெரிந்தது. இதுதொடர்பாக கன்னங்குறிச்சி இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.