30 சதவீத போனஸ் வழங்கக் கோரி தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்திய டாஸ்மாக் பணியாளர்கள். 
Regional03

30 சதவீத போனஸ் வழங்கக் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் போராட்டம்

செய்திப்பிரிவு

30 சதவீத போனஸ் வழங்கக் கோரி தூத்துக்குடியில் டாஸ்மாக் பணியாளர்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். அரசு பணியாளர் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் எம்.கணேசன், அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநிலதுணைத் தலைவர் எம்.மரகதலிங்கம், மாவட்ட செயல் தலைவர்எஸ்.மாரிமித்து, மாவட்டச் செயலாளர் எஸ்.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

டாஸ்மாக் பணியாளர்கள் கரோனா காலத்திலும் அரசுஉத்தரவை மதித்து பணியாற்றியுள்ளனர். ஆண்டு தோறும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு 20 சதவீத போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு10 சதவீத போனஸ் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமடையச் செய்துள்ளது. எனவே, டாஸ்மாக் பணியாளர்களுக்கு 30 சதவீத போனஸ் வழங்க வேண்டும்.

மேலும், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகள் கரோனா பரவல் காரணமாக காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தன. இதனால் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் குறைந்தன. இந்நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகளின் பணி நேரம் பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளின் நேரத்தை மாற்றாமல் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை செயல்படுவதற்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT