மதுரையில் நேற்று அகில இந்திய அஞ்சல் மற்றும் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம் சார்பில் அஞ்சல்துறை ஓய்வூதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 6வது ஊதியக்குழு பரிந்துரைப்படி மருத்துவக் காப்பீடுத் திட்டத்தை அமல்படுத்தக்கோரி, தல்லாகுளம் தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும், ஓய்வுபெற்ற தபால்காரர்களுக்கு 1.1.96 முதல் ஓய்வூதிய மாற்றம், நிலுவைத்தொகை வழங்க வேண்டும். எழுத்தர் பயிற்சிக் காலத்தை கணக்கில் எடுப்பதற்கு பயிற்சி சான்றிதழ் கேட்காமல் பதவி உயர்வை அமல்படுத்த வேண்டும். மத்திய அரசு மருத்துவமனைகள் இல்லாத மாவட்டங்களில் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெற அனுமதி அளிக்க வேண்டும். அனைத்து மாவட்டத்திலும் மத்திய அரசு மருத்துவமனைகள் அமைத்து கரோனா நோய் தொற்றுக்கு கட்டணமில்லாத சிகிச்சை வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஏ.பழனிச்சாமி தலைமை வகித்தார். செயல் தலைவர் எஸ். அப்பன்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், மாவட்ட செயலாளர் எஸ்.பாண்டி, பொருளாளர் ஜெ.வில்லியம்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.