ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 192 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. பேட் கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் 5 பந்துகளில் 19 ரன்கள் விளாசப்பட்ட நிலையில் கடைசி பந்தில் ராபின் உத்தப்பா (6) ஆட்டமிழந்தார். 3-வது ஓவரை வீசிய கம்மின்ஸ் பென் ஸ்டோக்ஸையும் (18), கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையும் (4) வெளியேற செய்தார். ஷிவம் மாவி வீசிய 4-வது ஓவரில் சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிலும் கம்மின்ஸ் வீசிய 5-வது ஓவரில் ரியான் பராக் ரன் ஏதும் எடுக்காமல் நடையைக் கட்டினர்.
ஐந்து ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்து திணறிய ராஜஸ்தான் அணி அதன் பின்னர் சரிவில் இருந்து மீளமுடியாமல் போனது. 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
அதேவேளையில் 7-வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி 14 புள்ளிகளுடன் பட்டியலில் 4-வது இடத்துக்கு முன்னேறி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் உயிர்ப்புடன் உள்ளது. தோல்வி குறித்து ராஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறியதாவது: பவர்பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டு அங்கிருந்து முன்னேறி செல்வது என்பது எப்போதுமே கடினம். ஆட்டத்தை சிறப்பாக தொடங்கினோம். ஆனால் பின்னர் கொத்தாக விக்கெட்டுகளை இழந்தோம்.
எங்களது பேட்ஸ்மேன்களில் முதல் நான்கு அல்லது ஐந்து வீரர்கள் பொறுப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. அதே வேளையில் சில நல்ல விஷயங்களும் நடைபெற்றன. ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒவ்வொரு ஆட்டத்திலும் விதிவிலக்காக இருந்து வருகிறார். ராகுல் டெவாட்டியா போட்டி முழுவதிலும் சிறப்பாக பந்து வீசினார். இருவருக்கும் போதுமான ஆதரவு இல்லை.
இவ்வாறு ஸ்டீவ் ஸ்மித் கூறினார்.
இன்றைய ஆட்டம்
ஹைதராபாத் - மும்பை
இடம்: ஷார்ஜா
நேரம்: இரவு 7.30
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்