ஊழல் அதிகாரிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் ஊழல் குறையும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேவையான எண்ணிக்கை யில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னையைச் சேர்ந்த சூரியப்பிரகாசம் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புக ழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குக்கான பதில் மனுவை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்கு நர் சுதாதேவி தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் 862 நேரடி நெல் கொள்முதல் மையங்கள் செயல்படுகின்றன. கரோனா காலத் தில் 2.42 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 12.25 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு ரூ.2,416 கோடி வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் செய்ய மூட்டைக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை லஞ்சம் வாங்குகிறார்கள் என மனுதாரர் கூறியிருப் பது உண்மையல்ல. செப்டம்பர் 30 வரை நெல் கொள்முதல் நிலையங்களில் 1,725 முறை ஆய்வு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட 105 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து நீதிபதிகள் கூறியதாவது: பல இடங்களில் கொள்முதலுக்காக வைத்திருந்த நெல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தி பணத்தைப் பறி முதல் செய்துள்ளனர். ஊழலில் ஈடுபடும் அதிகாரி களுக்கு தூக்கு தண்டனை வழங்கினால்தான் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாது. அனைத்து அதிகாரிகளையும் நீதிமன்றம் குற்றம்சாட்ட வில்லை. ஊழல் செய்யும் அதிகாரிகளையே சொல்கிறோம்.
நெல் கொள்முதலுக்கு பணம் வாங்குவதாகக் கூறுவது பொய் என்கின்றனர். ஆனால் முறை கேட்டில் ஈடுபட்டதாக 105 அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுத்ததாக பதில் மனுவில் கூறப் பட்டுள்ளது. இதில் எது சரி. நீதிமன்றத்துக்குத் தவறான தகவலை அளிப்பதா, நெல் கொள்முதல் நிலையங்களில் சோதனை நடத்தியவர்கள் யார், எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, இந்த 105 அதிகாரிகள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதா, எவ்வளவு தொகை பறிமுதல் செய்யப்பட்டது என்பது தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
லஞ்சம் இல்லாத நிர்வாகம் தொடர்பாக ஆய்வு நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் குழு, ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் ஒவ்வொரு நிலையிலும் சொத்து விவரம் நிர்ணயம் செய்ய வேண்டும் என பரிந்துரை செய்தது. இதை அனைத்துத் துறை செயலர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டு விசாரணையை நவ.9-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
‘அனாதையாக்கப்படும் விவசாயம்’
வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் கூறும்போது, “விவசாயிகள் இரவு, பகல் பார்க்காமல் உழைத்து விளைவிக்கும் நெல்லுக்கு உரிய மதிப்பு கொடுப்பதில்லை. விவசாயம் செய்ய தற்போது யாரும் முன்வருவதில்லை. நாட்டில் விவசாயம் அனாதையாக்கப்படுகிறது. விளைபொருட்களின் விலை அதிகரிக்கும்போது அதை யாரும் ஏற்பதில்லை. விவசாயத்துக்கான செலவினங்களையும் யாரும் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை” என்றனர்.