கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக கடந்த அக்.30-ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்ட சு.மலர்விழி, ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரூர் மாவட்டத்தில் வீடில்லாத ஏழைகள் மற்றும் தகுதியுடையோருக்கு இலவச வீட்டுமனை வழங்குவதற்காக வருவாய்த் துறை சார்பில் கணக்கெடுக்கும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
தகுதியுள்ளோருக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பருவமழை தொடங்கி உள்ள நிலையில், கரூரில் பல இடங்களில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். பருவமழை சேதங்களை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிடப்படும்.
நகரில் அனுமதியின்றி விளம்பர பதாகைகள் வைத்திருப்பது தொடர்பாக, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்காத வர்த்தக நிறுவனங்கள் கண்காணிக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும். விதிமீறல் தொடர்ந்தால், சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படும் என்றார்.