Regional02

அஞ்சலக சேமிப்பு புத்தகங்களில் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் தூத்துக்குடி ஆட்சியர் வெளியிட்டார்

செய்திப்பிரிவு

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்துறை குழந்தைபாதுகாப்பு அலகு மூலம் குழந்தைபேணுதல் மற்றும் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அஞ்சலக சேமிப்பு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார். அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் உதய்சிங் பெற்றுக்கொண்டார்.

பின்னர் ஆட்சியர் கூறியதாவது: குழந்தைகளைப் பேணுதல் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர், சட்டவிரோத குழந்தை தத்தெடுத்தல் ஆகியவை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் சமூக பாதுகாப்புத்துறையின் மூலம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய 20,000 அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அஞ்சல் துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகங்களை அனைத்து அஞ்சலகத்திலும் கணக்கு தொடங்கும் பொதுமக்களிடம் வழங்கி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT