Regional02

ஆண்டிபாளையம் கோயில் நிலத்தை போலீஸாருக்கு வழங்கியதற்கு மக்கள் எதிர்ப்பு

செய்திப்பிரிவு

கோயில் நிலத்தை மாநகர போலீஸாருக்கு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று நடந்த அமைதி பேச்சுவார்த்தையை பொதுமக்கள் புறக்கணித்தனர்.

திருப்பூர் அருகே மிகவும் பழமைவாய்ந்த ஆண்டிபாளையம் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமாக 10 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் வழித்தடம்போக, 9 ஏக்கர் நிலத்தை ரூ.5 கோடிக்கு மாநகர போலீஸாருக்கு, இந்து சமய அறநிலையத் துறை விற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல்வேறு கிராம மக்களும் காலம், காலமாக வழிபட்டு வரும் கோயில் நிலத்தை யாருக்கும் தெரியாமல் விற்றதைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து, கோட்டாட்சியர் ஜெகநாதன் தலைமையில் நேற்று அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனை, அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர்.

இதுதொடர்பாக வருவாய்த் துறையினர் கூறும்போது, "பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பொதுமக்கள் பங்கேற்கவில்லை. இதுதொடர்பாக வருவாய்த் துறையினருக்கு தகவல் அளித்தால், அடுத்தகட்டமாக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம்" என்றனர்.

SCROLL FOR NEXT