தமிழக விவசாயிகள் பாதுகாப்புசங்க நிறுவனரும், வழக்கறிஞருமான ஈசன், தலைவர் பி.சண்முகசுந்தரம் , நேர்மை மக்கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் பழ.ரகுபதி ஆகியோர், திருப்பூரில் நேற்று கூறியதாவது:
உயர் மின் கோபுரம் அமைப்பதற்கும், மத்திய அரசுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும், மத்திய அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றும், இதுதொடர்பாக மத்திய அரசை எந்த கேள்வியும் கேட்கக்கூடாது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளது, முழுமையான தவறான செய்தி. 1885-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்திய தந்தி சட்டம் இயற்றப்பட்டது. இதை வைத்துதான் விவசாய நிலங்களில்,உயர் அழுத்த மின் கோபுரங்கள்அமைக்கப்படுகின்றன.
தற்போதும், சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இருந்து தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம்காங்கயம் அருகே உள்ள புகளூர் வரை 1800 கிலோ மீட்டர் தூரத்துக்குஉயர் அழுத்த மின் பாதையை மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம்அமைத்து வருகிறது. இதேபோல, தமிழகத்தில் 6 உயர் மின் கோபுரத் திட்டங்களை விவசாய நிலங்கள் வழியாக செயல்படுத்தி வருகிறது. இதற்கான அனுமதியை, மத்திய அரசு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 2015 செப்.24-ம் தேதி வழங்கியது. எனவே, மத்திய அரசுக்கும், உயர்மின் திட்டங்களுக்கும் தொடர்பு இல்லை என்று நிரூபித்துவிட்டால், பாதிக்கப்பட்ட விவசாயிகள் சார்பில் அண்ணாமலைக்கு ரூ.1 கோடி பரிசு அளிக்கப்படும்" என்றனர்.