காஞ்சிபுரம் மாவட்டம் நெற்குன்றம் கிராமத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரிக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த கிராமம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு அருகில் உள்ளதால் கல்குவாரிகளில் வெடி வெடிக்கும்போது பறவைகள் அஞ்சி வேறிடம் செல்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பழைய சீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேரி, மதூர், சிறுமயிலூர் என பல கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் இயங்கி வருகின்றன.
விரைவில் நெற்குன்றம் கிராமத்திலும் அதற்கு அருகாமையில் உள்ள பகுதிகளிலும் கல்குவாரிகள் அமைய உள்ளன. இந்தப் பகுதிகளில் கல்குவாரி அமைக்க அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வெடி சத்தத்தில்..
இந்நிலையில் இங்கு கல்குவாரி அமைந்தால், வெடி சத்தத்தில் பறவைகள் அஞ்சி வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குக் கூட பாதிப்புவர வாய்ப்பு இருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் சரணாலயத்துக்கு சுற்றுலா பயணிகளின் வருகையிலும் பாதிப்பு ஏற்படும். எனவே இந்தப் பகுதியில் கல்குவாரி அமைக்கக் கூடாது என்று அனைவரும் வலியுறுத்துகின்றனர்.