Regional02

அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்யலாம் என அறிவிப்பு

செய்திப்பிரிவு

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டு வரும் பதிவு பெறாத தொழிலாளர்கள், நலவாரியங்களில் புதிதாக பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தொழிலாளர் துறையில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 17 தொழிலாளர் நலவாரியங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. நலவாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம்,மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம் மற்றும் விபத்து மரணம் ஆகியவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வீட்டுவேலை செய்யும்தொழிலாளர்கள் உட்பட கட்டுமானம், உடலுழைப்பு, அமைப்புசாரா ஓட்டுநர்கள், சலவை,முடிதிருத்துவோர், தையல், கைவினை, கைத்தறி, விசைத்தறி, மண்பாண்டம், தெரு வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுவரும் பதிவு பெறாத தொழிலாளர்கள் தொடர்புடைய நலவாரியங்களில் https://labour.tn.gov.in/ என்ற இணையதளத்தில் புதிதாக பதிவு செய்துகொள்ளலாம். ஏற்கெனவே பதிவு செய்தவர்கள் தங்களது பதிவை புதுப்பித்தும் கொள்ளலாம்.

இதை அமைப்புசாரா தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT