உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் முதலீடுகளை அதிகரிக்கவும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை பிற துறைகளுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் ஸ்தம்பித்தது. இந்த நெருக்கடியால் பல தொழில்கள் மீண்டுவர சிரமப்படுகின்றன. எனவே தொழில்களை மீட்கவும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கவும் மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரிய எலெக்ட்ரானிக்ஸ் உற்பத்தி நிறுவனங்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் மருத்துவ உபகரண உற்பத்தி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தைப் பிற துறைகளுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் கூறியுள்ளார்.
இதற்கான அனுமதியை விரைவில் மத்திய அமைச்சரவை பரிசீலனை செய்து வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் எந்தெந்த துறைகளுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்ற விவரத்தை அவர் குறிப்பிடவில்லை.