கோவை குருடம்பாளையத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்) பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்துக்கு அருகே கடந்த 30 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த நடைபாதையை, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மறித்து தடுப்புக் கல் அமைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் மற்றும் குடியிருப்போர் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியிடம் சில மாதங்களுக்கு முன்னர் புகார் அளித்தனர். ஆட்சியர் உத்தரவின் பேரில், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மத்திய ரிசர்வ் போலீஸ் படை பயிற்சி மையத்தினர் மற்றும் பொதுமக்களுடன் கடந்த 27-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, ‘‘பொதுமக்கள் பயன்படுத்திவந்த பாதையை தடுக்கக்கூடாது. தடுப்புக் கம்பியை அகற்ற வேண்டும். இவ்விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் உள்ள வழக்கு விசாரணை முடியும் வரை விவசாய வாகனங்களை அனுமதிக்க வேண்டும்’’ என கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.