Regional02

உயர் மின் கோபுர வழித்தட திட்டத்துக்கும் மத்திய அரசுக்கும் எந்த தொடர்பும் இல்லை பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை விளக்கம்

செய்திப்பிரிவு

உயர் மின் கோபுர வழித்தட திட்டங்கள் அமைக்கும் விவகாரத் தில் மத்திய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று, பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயத் தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மனுஸ்மிருதி என்பது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனு என்பவரால் எழுதப்பட்ட சட்டம். அதில் ஏகப்பட்ட மனு சட்டங்கள்உள்ளன. 1806-ல் இந்தியா வந்த வில்லியம் ஜோன்ஸ் என்ற ஆங்கிலேயர், அவருக்கு பிடித்த மனுஸ்மிருதி ஒன்றை சமஸ்கிருதத்தில் இருந்து மொழி பெயர்த்து, அதில் பெண்களை பற்றி அவதூறாக எழுதியுள்ளனர் என ஆங்கிலத்தில் எழுதினார். இவ்வாறு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நூலை திராவிடர் கழகம் தமிழில் மொழி பெயர்த்துள்ளது. தவறான ஒரு நூலை வைத்து, திராவிடர் கழகத்தினர் தமிழில் மொழி பெயர்த்துள்ளனர். அது மனுஸ்மிருதியே இல்லை.

உயர் மின் கோபுர வழித்தடங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமிழகத்தில் ஒரு கட்டமைப்பு திட்டம் வருகிறது என்றால், அதில் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், உள்ளூர் வட்டாட்சியர்கள் கருத்து கேட்டு, இந்திய தந்தி சட்டத்தை பயன்படுத்தி இதற்கான எல்லையை வரையறை செய்கின்றனர். எந்த விவசாயி நிலத்தின் மீது வழித்தடம் செல்கிறது என்பதை மத்திய அரசு எப்படி முடிவு செய்யும். இந்த பிரச்சினையில் பாஜகவை குறை கூறுவோர் ஆவணங்களை சரியாக பார்க்க வேண்டும்.

உள்கட்டமைப்பு துரிதமாக நடைபெற வேண்டும் என்பதற்காக தந்தி சட்டம் போடப்பட்டது. தமிழகத்தில் அனைத்து விஷயங் களிலும் கட்சியினர் அரசியல் செய்கின்றனர். உயர் மின் கோபுர விவகாரத்தில் கேள்விகள் கேட்கக்கூடாது. உயர் மின் கோபுரத்தை என்ன காற்றிலா அமைக்க முடியும். இதுகுறித்து மாநில அரசிடம் மட்டுமே கேள்வி கேட்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT