நிறுவனர்கள் கோமதி சண்முகசுந்தரம், டாக்டர் பாலாஜி சம்பத். 
Regional03

புதிதாக நிதி திரட்டியுள்ள ஆஹாகுரு நிறுவனம்: ஆன்லைன் படிப்புகளுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டம்

செய்திப்பிரிவு

ஆன்லைனில் கற்பித்தலில் ஈடுபட்டுவரும் ஆஹாகுரு நிறுவனம் ஆனந்த் மஹிந்திராவின் குடும்ப அலுவலகத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு முதலீட்டு நிறுவனத்திடமிருந்து நிதியை திரட்டியுள்ளது.

இந்த தொகையை உயர்நிலை பள்ளி மாணவர்களின் ஆன்லைன் படிப்புகளுக்கு தேவையான புதியதொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்தவும், நாடு முழுவதும் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் விரிவாக்கம் செய்யவும், சிறந்த ஆசிரியர்களை நியமிக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு படித்தலில் உள்ள சிரமங்களை போக்கும் வழிகளை கண்டறிவதற்காக டாக்டர் பாலாஜி சம்பத், கோமதி சண்முகசுந்தரம் ஆகியோரால் ஆஹாகுரு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் உருவாக்கிய தனித்தன்மை வாய்ந்த முறைகளால் மாணவர்கள் பாடத்தின் அடிப்படைகளை புரிந்துகொண்டு சிக்கல்களை தீர்க்கும் முறைகளை அறிந்துகொண்டனர்.

குறிப்பாக இங்கு பயின்ற மாணவர்கள் பலர் ஜேஇஇ, நீட்தேர்வுகளில் சிறப்பாக சாதித்துள்ளனர். பல்வேறு பயிற்று மையங்களில் சராசரியாக 20 சதவீதம் பேர் மட்டுமே ஜேஇஇ தேர்ச்சி பெறும் நிலையில், ஆஹாகுருவில் பயின்ற 75 சதவீதம் பேர் ஜேஇஇ தேர்விலும், 95 சதவீதம் பேர் நீட் தேர்விலும் நடப்பாண்டில் வெற்றி பெற்றுள்ளனர்.

ஆனந்த் மஹிந்திரா கூறும்போது, “ஆஹாகுரு நன்கு ஆராய்ச்சி செய்யப்பட்ட நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம்கற்றலை எளிதாகவும் புரிந்துகொள்ளக் கூடியதாகவும் ஆக்குகிறது. அறிவியல் மற்றும் கணிதத்தை கற்பிக்கும் தரத்தை மேம்படுத்துவதில் அவர்களின் கூர்மையான கவனம் மாணவர்களுக்கு அடிப்படைகளை மிகவும் திறம்பட புரிந்துகொள்ள உதவும்" என்றார்.

பாலாஜி சம்பத் கூறும்போது, “இந்த நிதி மாணவர்களுக்கு அவர்களின் பள்ளி மற்றும் பொது தேர்வுகளுக்கு உதவும் வகையில் புதிய படிப்புகளைத் தொடங்க உதவுகிறது. மாணவர்களின் கற்றல் அனுபவத்தை வளமாக்க பல புதிய தொழில்நுட்ப அம்சங்களிலும் நாங்கள் பணியாற்றி வருகிறோம்” என்றார்.

கோமதி சண்முகசுந்தரம் கூறும்போது, “ஆஹாகுரு ஆன்லைன் வகுப்புகள் படிப்படியாக வளர்ச்சி பெற்று வருகிறது. தற்போது திரட்டப்பட்டுள்ள நிதி அதிக ஆசிரியர்களை நியமிக்கவும், மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சிக்கான உதவிகளையும் வழங்க உதவும்” என்றார்.

SCROLL FOR NEXT