Regional03

84 நாட்கள் தீவிர சிகிச்சை அளித்து கரோனாவிலிருந்து ஊராட்சி தலைவரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 84 நாட்கள் தீவி சிகிச்சை அளித்து கரோனா தொற்றில் இருந்து ஊராட்சித் தலைவரை காப்பாற் றிய அரசு மருத்துவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பாராட்டினர்.

சிவகங்கை அருகே நாலுகோட்டை ஊராட்சித் தலைவராக இருப்பவர் மணிகண்டன்(50). இவர் காய்ச்சல், மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக.6-ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

மேலும் அவருக்கு 80 சதவீதத்துக்கும் மேலாக நுரையீரல் பாதிப்பு இருந்தது. இதனால் அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருந்தது. கல்லூரி முதல்வர் ரத்தினவேல் தலைமையில் கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவக் குழுவினர் ஷீலா, பீர்முகமது, சுந்தரம், ரேணுகா, வைரவராஜன், பாலமுருகன், மீனா, முகமது ரபீக், சூரியநாராயணன் உள்ளிட்டோர் தீவிர சிகிச்சை அளித்தனர்.

அவருக்கு தொடர்ந்து 20 நாட்கள் செயற்கை சுவாச கருவி மூலமாகவும், 40 நாட்கள் உயர் ஓட்ட ஆக்ஸிஜன் கருவி மூலமாகவும் ஆக்ஸிஜன் செலுத்தப்பட்டது. இந்நிலையில் மருத்துவர்களின் முயற்சியால் 84 நாட்களுக்கு பிறகு அவர் குணமடைந்து வீடு திரும்பினார். அவரை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், டீன் ரத்தினவேல் வழியனுப்பி வைத்தனர். 84 நாட்கள் போராடி ஊராட்சித் தலைவரை காப்பாற்றிய அரசு மருத்துவர்களை ஆட்சியர் மற்றும் ஊராட்சித் தலைவரின் உறவினர்கள் பாராட்டினர். ஊராட்சித் தலைவருக்கு ரூ.40 லட்சம் மதிப்புள்ள சிகிச்சை இலவசமாக அளிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT