வேலூர் சிறையில் முருகன் உடல் நலத்துடன் இருப்பதாக அவருக்கு கரோனா தொடர்பான எந்த பரிசோதனையும் நடத்தவில்லை என்று சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரமதர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு தொகுதியில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருப்பதாகவும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் நேற்று தகவல்கள் பரவின. இந்தத் தகவலை முருகனின் வழக்கறிஞர் புகழேந்தியும் உறுதி செய்தார்.
இது தொடர்பாக சிறை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, ‘‘சிறைக்குள் கரோனா தொடர்பான விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படுகிறது. வழக்குகளில் கைது செய்யப்படுபவர்கள் மத்திய சிறைக்குள் அடைப்பதற்கு முன்பாக வேலூர் பார்ஸ்டல் சிறை மற்றும் வாணியம்பாடி, குடியாத்தம் உள்ளிட்ட கிளைச் சிறைகளில் தனிமைப்படுத்தி அடைக்கப்படுகின்றனர்.
கரோனா பரிசோதனை முடிவுகள் வந்த 15 நாட்களுக்குப் பிறகே அவர்கள் மத்திய சிறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.
சிறைக்குள் வந்து செல்லும் காவலர்கள் யாருக்காவது சளி, இருமல் இருந்தாலே உடனடியாக தனிமைப்படுத்தி கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. சிறைவாசிகளுக்கும் இதே நடைமுறைதான். அந்த வகையில் முருகனுக்கு சளி, இருமல், காய்ச்சல் எதுவும் இல்லை. அவரது உடல் நிலை நன்றாகவே இருக்கிறது. அவருக்கு கரோனா பரிசோதனை எதுவும் நடத்தவில்லை’’ என்று தெரிவித்தனர்.
இவருக்கு கடந்த 4 நாட்களாக காய்ச்சல் இருப்பதாகவும் கரோனா பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் நேற்று தகவல்கள் பரவின.