மற்றவை

சரியான திட்டமிடலும், உழைப்புமே வெற்றிக்கு காரணம்: தமிழிசை சவுந்திரராஜன் கருத்து

செய்திப்பிரிவு

பாஜகவின் தேர்தல் வெற்றிக்கு சரியான திட்டமிடலும் நேர்த்தி யான உழைப்புமே முக்கிய காரணமாக இருந்தது என்று பாஜக தேசிய செயலாளர் தமிழிசை சவுந்திரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: பாஜகவிற்கு கிடைத்திருக்கும் வெற்றி நாங்கள் மிகவும் எதிர்பார்த்ததுதான். இது தலைவர்களின் திட்டமிடலுக்கும், தொண்டர்களின் உழைப்புக்கும் கிடைத்த வெற்றியாகும். நரேந்திர மோடி பிரச்சாரத்திற்காக 4 லட்சம் கி.மீ பயணம் செய்துள்ளார். பாஜகவின் வெற்றியை தடுக்க மதவாதம், பிரிவினைவாதம் என்றெல்லாம் விமர்சித்தார்கள், ஆனால், மக்கள் அவற்றை பொய்யாக்கிவிட்டனர்.

1984-க்கு பிறகு தேசிய அளவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது இதுவே முதல் முறையாகும். பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றிருப்பதால் மக்கள் நலத்திட்டங்களை எந்த குறுக்கீடு மின்றி எளிதாக செயல்படுத்த முடியும். அதிகளவில் வாக்கு வங்கியில்லாத வடகிழக்கு மாகா ணங்களில் கூட அதிக இடங்களை பிடித்துள்ளோம்.

ஈழத்தமிழர் நலன், மீனவர் பிரச்சினை உள்ளிட்ட விஷயங்களில் காங்கிரஸ் நிறைய தீங்குகளை செய்ததே தமிழகத்தில் அது படுதோல்வி அடைந்ததற்கு காரணம். காங்கிரஸும், திமுக வும் தனித்தனியே போட்டியிட் டாலும் இரு கட்சிகளுமே ஒரே மாதிரியானவை என்பதால் மக்கள் அவர்களை புறக்கணித்து விட்டார்கள். இந்த தேர்தல் முடிவு, மக்களுக்கு காங்கிரஸ் மீதிருக்கும் வெறுப்பையே காட்டுகிறது. இத்தேர்தலில் நல்ல தீர்ப்பினை வழங்கிய மக்களுக்கு பாஜக சார்பில் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

SCROLL FOR NEXT