சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே வேப்பங்குளம் கிராமமக்கள் வறண்ட பூமியை வளமாக்கி வறட்சியை வென்று காட்டி சாதனை படைத்துள்ளனர்.
கல்லல் அருகே வேப்பங்குளம் ஊராட்சி புதுவேப்பங்குளம், பழைய வேப்பங்குளம், தேர்வலசை, அச்சினி, கல்குளம், சந்தனேந்தல், தெம்மாவயல் ஆகிய 7 கிராமங்கள் உள்ளன. இங்கு 2,000 பேர் வசிக்கின்றனர்.
ஆறு கண்மாய்கள், 600 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
தொடர் வறட்சியாலும், பராமரிப்பு இல்லாததாலும் கண்மாய், வரத்துக்கால்வாய் முழுவதும் சீமைகருவேல மரங்கள் ஆக்கிரமித்து இருந்தன. இதனால் 600 ஏக்கரும் தரிசாக விடப்பட்டன. இந்நிலையில் கிராமமக்களின் கூட்டு முயற்சியால் 2 ஆண்டுகளுக்கு முன்பு, 4 கண்மாய்கள் தூர்வாரப்பட்டு, தொடர்ந்து நீர் மேலாண்மையில் தன்னிறைவு பெற்று கிராமமாக திகழ்கிறது.
இதை அறிந்த மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனும் மீதமிருந்த 2 கண்மாய்களையும் அக்கிராமமக்கள் மூலமாகவே தூர்வார உதவினார். இதனால் 6 கண்மாய்களும் இந்த ஆண்டு முழுமையாக நிரம்பியது. நல்ல விளைச்சல் கண்டநிலையில் அடிமாட்டு விலைக்கு நெல்மூடைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்வதை தடுக்க, கிராமமக்களே கொள்முதல் செய்தனர்.
மேலும் கொள்முதல் செய்த நெல் மூடைகளை அரிசியாக மதிப்பு கூட்டி, அந்த அரிசிக்கு ‘வேப்பங்குளம் பிராண்டடு’ பெயரில் இணையதளத்தில் விற்பனை செய்தனர்.
தற்போது கோடையில் கண்மாய்களில் தண்ணீர் உள்ளதால் 25 ஏக்கரில் எள், கடலை, கேழ்வரகு, உளுந்து போன்ற பயிர்களை சாகுபடி செய்து மகசூல் கண்டுள்ளனர். தற்போது அவற்றை இணையதளம் மூலம் அறிவிப்பு செய்து விற்பனை செய்ய கிராமக்கள் தயாராகி வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயிகள் சந்திரன், ராசு கூறியதாவது:கண்மாய்கள், வரத்துக்கால்வாய்களை முழுமையாக தூர்வாரியதால் போதுமான தண்ணீர் கண்மாய்களில் உள்ளன. கோடையில் 100 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்ய தண்ணீர் இருந்தாலும் ஆடு, மாடு தொல்லையால் 25 ஏக்கரில் மட்டும் விவசாயம் செய்தோம்.
தற்போது விளைந்துள்ள கடலை, எள், கேழ்வரகு போன்றவற்றை எங்கள் கிராமத்திலேயே தேவைப்படுவோருக்கு விற்பனை செய்ய உள்ளோம்.
அதன்பிறகு இணையம் மூலம் விளம்பரம் செய்து, விற்பனை செய்வோம்.
எங்களது கிராமமக்களின் முயற்சியாலும், மாவட்ட ஆட்சியரின் உதவியாலும் விவசாயிகளின் லாபம் இரட்டிப்பு அடைந்துள்ளது. அடுத்தாண்டு கோடைக்குள் ஆடு, மாடுகளில் இருந்து பயிர்களை பாதுகாக்க நிலங்களை சுற்றிலும் முள்வேலி அமைக்க முடிவு செய்துள்ளோம், என்று கூறினர்.