ரிப்போர்ட்டர் பக்கம்

அடுத்த அபாயம் மருந்துப் பற்றாக்குறை: அரசு என்ன செய்ய வேண்டும்?

வெ.சந்திரமோகன்

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், விரைவில் மருந்துப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று வெளியாகும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியுள்ளன. மருந்து, உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டுசெல்வதில் தடையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது சாத்தியமாகவில்லை என்பதால் இந்தச் சிக்கல் எழுந்திருக்கிறது.

இதனால் சளி, காய்ச்சல் தொடங்கி உயர் ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உட்பட பல்வேறு நோய்களுக்கான மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்படலாம் என்று தெரிகிறது. குறிப்பாக, நீரிழிவு நோயாளிகளுக்குத் தேவைப்படும் இன்சுலின், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் தொடர்ந்து எடுக்க வேண்டிய மருந்துகள் போன்றவற்றின் விநியோகம் தடைபடுவது பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

நடைமுறைச் சிக்கல்கள்
மருந்து உற்பத்தித் தொழிலுடன் தொடர்புடைய தொழில்கள் முடங்கியிருப்பதால், வேறு வழியின்றி மருந்து உற்பத்தியை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாகப் பல மருந்து உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். அட்டைப் பெட்டி முதலான பார்சல் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள், அச்சுத் தொழிலகங்கள் போன்றவை மூடப்பட்டிருப்பது, இந்த நடைமுறைச் சிக்கலை உருவாக்கியிருக்கிறது. குறிப்பாக, மருந்து உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்கள் பெரும் சவால்களைச் சந்திக்க நேர்ந்திருக்கிறது. எனவே, வெளியில் வருவதைத் தவிர்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

இதற்காக, சிறப்பு அனுமதி பெற வேண்டியிருக்கிறது என்பதால் பலரும் தயங்குகிறார்கள் என்பது தெரியவருகிறது. ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், நீண்ட நேரம் எடுக்கும் இந்த நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அசாத்தியமான விஷயம் என்கிறார்கள் மருந்து உற்பத்தியாளர்கள்.

அத்துடன், போக்குவரத்தும் முடங்கியிருப்பதால், மருந்துப் பொருட்களைக் கொண்டுசெல்லும் வாகன ஓட்டிகள் பலரும் வாகனங்களை இயக்கத் தயக்கம் காட்டுகிறார்கள். சாலையோர உணவகங்கள் மூடப்பட்டிருப்பதால், உணவுக்குத் தவிக்க நேரிடும் எனும் அச்சம் அவர்களிடம் இருக்கிறது. இதனால், மருந்துப் பொருட்களை நீண்ட தூரம் கொண்டு செல்லும் வாகனங்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் மாநிலங்களுக்கு இடையிலான மருந்துப் பொருட்கள் விநியோகத்தை முடங்கும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சில்லறை விநியோகம் செய்யும் மருந்துக் கடைகளை மருந்துப் பொருட்கள் சென்றடைவதில் இருக்கும் சிரமம் விரைவில் சரிசெய்யப்பட வேண்டும் என்று மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.

இறக்குமதி, ஏற்றுமதி
சீனாவிலிருந்து மருந்துப் பொருட்களை இந்தியா அதிக அளவில் இறக்குமதி செய்துவரும் நிலையில், கரோனா அச்சுறுத்தலால் அந்நாட்டிலிருந்து மருந்துப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதில் பாதிப்பு ஏற்படலாம் எனும் அச்சம் ஆரம்பத்திலேயே எழுந்தது. குறிப்பாக, ஆக்டிவ் பார்மாசுடிகல் இங்க்ரேடியன்ட்ஸ் (active pharmaceutical ingredients -API) என்று அழைக்கப்படும் மருந்து மூலப்பொருட்களில் 60 முதல் 70 சதவீதம் வரை, சீனாவின் ஹூபேய் மாகாணத்திலிருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. வைட்டமின் B1, வைட்டமின் B6 போன்ற மாத்திரைகள், அடிப்படையான ஆன்டிபயாட்டிக் மருந்துகள் போன்றவை ஹூபேய் மாகாணத்தில்தான் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கரோனா வைரஸ் பாதிப்பு முதன்முதலில் கண்டறியப்பட்ட வூஹான் நகரம்தான் இந்த மாகாணத்தின் தலைநகர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வரும் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டபோது மருந்து இறக்குமதி பாதிக்கப்படும் சூழல் உருவானது.

இதையடுத்து, கடல் வழியே அவற்றைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது இந்தப் பிரச்சினையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம் எனும் நம்பிக்கை எழுந்தது. இதற்கிடையே, ஜெனரிக் மருந்துகளைப் பெருமளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றான இந்தியா, கரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைத் தொடர்ந்து அந்த மருந்துகளின் ஏற்றுமதியைத் தடை செய்தது. அத்துடன், அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குத் தேவையான மருந்துகள் கைவசம் இருப்பதால் கவலைப்படத் தேவையில்லை என்றும் மத்திய அரசு குறிப்பிட்டது.

இப்படி மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி, இறக்குமதி விஷயத்தில், இந்தியா சிறப்பாகவே செயல்பட்டிருந்தாலும்,
உள்நாட்டில் மருந்து விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் முடக்க நிலைதான் பலரைக் கவலைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

ஸ்பெயின் உதாரணம்
கரோனா வைரஸ் ஏற்படுத்தும் கோவிட் – 19 நோயால் அதிக உயிரிழப்புகளைச் சந்தித்துவரும் ஸ்பெயினில் பெரும்பாலான மருத்துவமனைகள் தனியார் வசம் இருப்பதால், சிகிச்சைக்கு அதிக பணம் செலவழிக்க முடியாமல் பலர் உயிரிழக்கிறார்கள். அங்கு மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையும் அதிகம். ஆனால், அதுபோன்ற அவல நிலை இந்தியாவில் இல்லை. இங்கு போதுமான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் அரசின் வசம் உள்ளன. மருந்துப் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவது, விநியோகிக்கப்படுவது போன்றவற்றைக் கண்காணிக்கும் அமைப்புகளும் பஞ்சமில்லை.

இவை அனைத்தையும் பயன்படுத்தி, மருந்துப் பொருட்கள் விநியோகம் தடையில்லாமல் நடக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இதற்கெனப் பிரத்யேகச் செயலியை ஏற்படுத்தி மருந்து விநியோகம் செய்வது, ஆன்லைன் மூலம் அரசே மருந்து விற்பனையைச் செய்வது, வீடு வீடாக விநியோகிப்பது போன்ற நடவடிக்கைகளும் கைகொடுக்கும். அரசு விரைந்து செயல்பட வேண்டிய நேரம் இது!

SCROLL FOR NEXT