காலநிலை மாற்றம், மனித செயல்பாடுகள், தவறான நீர் மேலாண்மை ஆகிய காரணிகளால், ஆண்டுதோறும் இருவித இடர்களை மாறி மாறி சந்தித்து வருகிறது சென்னை பெருநகரம். ஒன்று வெள்ளம், மற்றொன்று வறட்சி. இந்த இரண்டும் ஏற்படும்போது நாம் அதிகம் விவாதிப்பது தண்ணீர் நெருக்கடி குறித்துதான். இது சென்னைக்கு உரித்தான பிரச்சினை மட்டுமன்று. தமிழகம் முழுவதும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தாததன் விளைவுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறோம்.
இத்தகைய காலகட்டத்தில், சென்னையில், கடந்த பிப்.11-ம் தேதி தொடங்கப்பட்ட 'வாட்டர் மேட்டர்ஸ்' (Water Matters) என்கிற புகைப்படக் கண்காட்சி தண்ணீர் குறித்தும் அதனை நிர்வகிப்பது குறித்தும் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் நிச்சயம் சென்று பார்க்க வேண்டிய ஒன்றாக அமைந்துள்ளது.
அமெரிக்காவை மையமாகக்கொண்டு செயல்பட்டு வரும் ஸ்மித்சோனியன் சுற்றுலா கண்காட்சி சேவை நிறுவனம் (Smithsonian Institution Traveling Exhibition Service-SITES), கேர் எர்த் அறக்கட்டளை (Care Earth Trust) ஆகியவற்றுடன் இணைந்து அமெரிக்க துணைத் தூதரகம் இந்தக் கண்காட்சியை நடத்தி வருகிறது. இது, சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் நடைபெற்று வருகிறது.
இதனைப் புகைப்படக் கண்காட்சியாக மட்டும் சுருக்கி விட முடியாது. சென்னையின் நீர்வழிகளை அறியும் வகையிலான நீர்வழி நடைபயணங்கள், தண்ணீர் மேலாண்மை குறித்த நிபுணர்களின் கருத்தரங்குகள், விநாடி - வினா போட்டி, செயல்முறை விளக்கங்கள் உள்ளிட்டவையும் அரங்கேறுகின்றன. சென்னையின் தண்ணீர் மேலாண்மை குறித்து வரலாற்று ஆய்வாளர் வி.ஸ்ரீராம் கடந்த 19-ம் தேதி இந்த கண்காட்சியில், சென்னைக்கே உரித்தான நீர்மேலாண்மை முறைகளை வரலாற்றுபூர்வமாகப் பேசினார். 20-ம் தேதி, கவிஞர் கோவை சதாசிவம், 'தமிழில் பசுமை இலக்கியம் - ஒரு பார்வை' என்ற தலைப்பில் சர்வதேச மற்றும் உள்ளூர் கதைகளின் வழி பசுமை இலக்கியங்களை எடுத்துரைத்தார்.
இந்தக் கண்காட்சியில் தமிழகம் மட்டுமின்றி சர்வதேச அளவில் புகழ்பெற்ற புகைப்படக் கலைஞர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. 53 பேனல்களாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியில், நிலையான நீர் மேலாண்மையை மேற்கொள்வதன் அவசியம் குறித்தும், நகரமயமாதல், தவறான நீர் மேலாண்மை, தொழில்மயமாக்கல், கழிவுகள் உள்ளிட்டவற்றால் நீர்வழிப்பாதைகள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அழுத்தமாக உணர்த்தும் வகையில் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
"ஸ்மித்சோனியன் நிறுவனம் பல்வேறு கருப்பொருள்களில் இத்தகைய கண்காட்சிகளை நடத்தி வரும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனம். 'ஹெச்2ஓ' (H2O) என்ற பெயரில் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து கண்காட்சியை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் நடத்தப்படுவதால் உள்ளூர் முறைகளுக்கு ஏற்றார்போல் வடிவமைப்பை மாற்றி 'வாட்டர் மேட்டர்ஸ்' என்ற பெயரில் கண்காட்சியை நடத்துகிறோம். நம் பிரச்சினைகள் அதற்கு நாம் கையாளும் தீர்வுகள் ஆகியவற்றைக் குறிப்பாக வெளிப்படுத்தினால் தான் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் பலவற்றில் மாறுதல்களை நிகழ்த்தியுள்ளோம்.
ஸ்மித்சோனியன் நிறுவனத்தைச் சேர்ந்த டவுக் ஹெர்மன் (Doug Hermen) என்பவர் தான் முழுமையாக இந்தக் கண்காட்சியை வடிவமைப்பதற்கான யோசனைகளை வகுத்தவர். உள்ளூர் தகவல்களை நாங்கள் திரட்டிக் கொடுத்தோம். தண்ணீரின் இயற்பியல், வேதியியல் பண்புகளில் இருந்து சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார ரீதியாக அதனைப் புரிந்துகொள்வது வரை பல கோணங்களில் இந்தக் கண்காட்சியை வடிவமைத்துள்ளோம்" என்கிறார், 'கேர் எர்த்' அறக்கட்டளையின் திட்ட மேலாளர் சீதா கோபாலகிருஷ்ணன்.
இந்தக் கண்காட்சி, 53 முதன்மை பேனல்களைக் கொண்டுள்ளது. 6 பிரிவுகளாக இவை பிரிக்கப்பட்டுள்ளன. நீருக்கு உரித்தான சர்வதேச பொதுப்பண்புகளை அறியும் வகையில் முதல் 2 பிரிவுகளும், தென்னிந்தியாவுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு உரிய தண்ணீர் மேலாண்மை குறித்து 3-வது பிரிவும், நீர்நிலைகள் எப்படி மாறி வருகின்றன என்பதை விளக்கும் வகையில் கடைசி 3 பிரிவுகளும் அமைந்துள்ளன.
இதில், பீங்கான் கிண்ணங்களில் தண்ணீர் நிரப்பப்பட்டு இரண்டு சிறிய குச்சிகளால் வாசிக்கப்படும் 'ஜல்தராங்' இசைக்கருவி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. கிணறு, அடிகுழாய் போன்ற தமிழகத்துக்கே உரிய தண்ணீர் பயன்பாட்டு முறைகள், பெருத்துக்கொண்டே போகும் சென்னையால் நீர்நிலைகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துகள், தண்ணீர் பயன்பாட்டுக்கு உபயோகிக்கப்படும் பாரம்பரிய பாத்திரங்கள், ஏரி உள்ளிட்ட தமிழகத்தின் பாரம்பரிய நீர் மேலாண்மை முறைகள், தண்ணீர் நெருக்கடியால் மக்கள் சந்திக்கும் அவலங்கள், தண்ணீருடன் தொடர்புடைய மனித, பாலின உரிமைகள் ஆகியவற்றை விளக்கும் உணர்வுபூர்வமான, உடனடியாகத் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.
மேலும், தமிழகத்துக்கே உரிய தனித்துவமான நீர்ப்பாசன முறைகள், விவசாய முறைகளை விளக்கும் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளன. உள்ளூர் நில அமைப்புகளுக்கு ஏற்றவாறு தண்ணீர் மேலாண்மையை எப்படி மக்கள் கட்டமைத்துள்ளனர் என்பதும் இதில் விளக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் விலை மதிப்பற்றதாக மாறி வருவதை உணர்த்தும் வகையில், பெண் ஒருவர் தண்ணீரை லாக்கரில் வைத்துப் பூட்டுவது போன்று, ஆர்.செல்வராஜ் என்பவர் இயக்கிய 'லாக்கர்' என்கிற 3 நிமிடங்களுக்கும் குறைவான குறும்படம் தொடர்ந்து திரையில் ஓடிக்கொண்டும் இருக்கிறது.
"15-25 வயது வரையிலான இளம் தலைமுறையினர் தண்ணீரின் முக்கியத்துவம் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தினமும் 2,500 முதல் 3,000 வரை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் இங்கு வருகை தந்து ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர்" என்கிறார் சீதா.
வரும் 29-ம் தேதி வரை இக்கண்காட்சி நடைபெறுகிறது. நாளை (பிப்.22) காலை 10.30 மணிக்கு சென்னையின் நீர் மேலாண்மை முறைகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் கோம்பை அன்வர், வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் பங்கேற்கும் கருத்தரங்கும், தண்ணீர் குறித்து விநாடி-வினா போட்டி மதியம் 2.30 மணிக்கும் நடைபெறுகிறது. கண்காட்சியை எந்தக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் பார்வையிடலாம்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in