தஞ்சைப் பெரிய கோயில்

ராஜராஜன் நுழைவு வாயிலும், மகா துவார வாயிலும்!

செய்திப்பிரிவு

இரண்டாம் கோபுரமாக விளங்கும் ராஜராஜன் நுழைவுவாயில் முதலாம் ராஜராஜனால் 78 அடி உயரத்தில் கட்டப்பட்ட மூன்று நிலைக் கோபுரமாகும். உபபீடத்திலிருந்து சிகரம், ஸ்தூபி வரை கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது.

உயர்ந்த உபபீடம், அதிஷ்டானம், பித்தி, பிரஸ்தரம் முதலிய அங்கங்களோடும், மூன்று நிலைகளிலும் அழகிய வேலைப்பாடுகளோடும், சிற்பச் சுதை உருவங்களோடும் இக்கோபுரம் அமைந்துள்ளது.

மகாதுவார வாயிலில் கேரளாந்தகன் கோபுரத்தில் இருப்பது போன்று 4X4 அடி இடைவெளியில் 40 அடி உயரத்தில் ஒரே கல்லால் ஆன இரண்டு நிலைக்கால்கள் உள்ளன.

பிற்காலத் திருப்பணிகளின்போது இந்த நிலைக்கால்கள் உள்ள பகுதிகளில் புதிய கட்டுமானம் அமைத்து நுழைவு வாயிலைச் சுருக்கியுள்ளதாக தெரிகிறது. வாயிற் பகுதியில் இருபுறமும் இரண்டு அடுக்குடைய அறைகள் உள்ளன.

கேரளாந்தகன் நுழைவு வாயில் போன்றே இந்த கோபுரத்திலும் தரைமட்டத்திலிருந்து பிரஸ்தரம் வரை உள்ள கட்டுமானம் விளங்குகிறது. இங்கு திருச்சுற்று மாளிகையோடு கோபுரம் இணைந்து காணப்படுகிறது.

மிகப்பெரிய துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. கோபுரத்தின் உட்கட்டுமான அமைப்புகள் கேரளாந்தகன் வாயில் போன்று அமைக்கப்பட்டுள்ளது.

- வி.சுந்தர்ராஜ்

SCROLL FOR NEXT