தமிழகத்தின் தலைநகரம் முதல் குக்கிராமங்கள் வரை குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மக்கள் செயல்படுத்துவதில் தற்போது முனைப்பு காட்டிவரும் நிலையில், 1000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நீர் மேலாண்மைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து மழை நீரை பாசனத்துக்கும், மக்களின் குடிநீர்த் தேவைக்கும் பயன்படுத்தும் வகையில் மழை நீர் சேகரிப்பு மேலாண்மையில் சிறந்து விளங்கியுள்ளனர்.
தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் பெரிய கோயிலை எவ்வளவு கலை நுட்பத்துடன் கட்டி முடித்தாரோ, அதேபோல பரந்து விரிந்துள்ள பெரிய கோயிலில் மழைக் காலத்தில் கிடைக்கும் மழைநீரை வீணாக்காமல் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற நோக்கத்துடன், கோயில் அருகே சிவகங்கை என்கிற குளத்தை வெட்டி, கோயிலில் இருந்து மழைநீர் செல்லும் வகையில் சாளவம் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நீரைச் சேமித்துள்ளார். இதை ராஜராஜ சோழனுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த மராட்டிய வம்சத்தின் சரபோஜி மன்னரும் சிறப்பாகக் கையாண்டுள்ளார் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் மணி.மாறன் சொல்கிறார்:
தஞ்சாவூரை ஆண்ட ராஜராஜ சோழன் தனது ஆளுகைக்குட்பட்ட நிலங்களை வளப்படுத்த குளம், ஏரிகளை வெட்டிய அதே நேரத்தில் குடிநீர்த் தேவைக்காக முதலில் பெரிய கோயில் அருகே சிவகங்கை குளத்தை வெட்டினார். இக்குளத்துக்கு இயற்கையாக மழைக் காலங்களில் நிரம்பும் தண்ணீரையை தாண்டியும், பெரிய கோயிலில் விழும் மழை நீரைச் சேமிக்க கோயிலின் வடக்கு புறத்தில் ‘சாளவம்’ என சொல்லப்படும்- நீர் செல்லும் வகையிலான கருங்கற்களைக் கொண்டு இரண்டு பாதைகளை அமைத்துள்ளார்.
இரண்டிலும் தண்ணீரைத் தடுத்து அனுப்பும் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. முதல் சாளவத்தை திறந்தால் முதலில் பெய்யும் அழுக்காக இருக்கும் மழை நீர் நந்தவனத்துக்குச் செல்லும், அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சுத்தமாக வரும் நீரை முதல் சாளவத்தை அடைத்துவிட்டு, சிவகங்கை குளத்துக்குச் செல்லும் இரண்டாவது சாளவத்தை திறந்துவிட்டு நீரைச் சேமித்து வைத்துள்ளனர்.
சிவகங்கை குளம் நிரம்பிய பிறகு அதன் தொடர்ச்சியாக மற்ற குளங்களான அய்யன் குளம், சாமந்தான் குளம் ஆகியவற்றுக்கும் நீர் செல்லுமாறு நீர்வழிப் பாதைகள் அமைக்கப்பட்டு, மழைநீர் சேமித்து வைக்கப்பட்டு வந்துள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலில் நல்ல பயனைக் கொடுத்த இந்த சாளவம் முறையிலான மழைநீர் சேகரிப்பு முறை, அதன்பிறகு ராஜராஜ சோழன் கட்டிய அனைத்து கோயில்களிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தஞ்சாவூரை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் ‘ஜல சூத்திரம்’ என்கிற அமைப்பை உருவாக்கி கோட்டையில் உள்ள கிணறுகள், நகரப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் செல்லும் விதமாக வடிவமைத்தார். அவ்வாறு குடிநீர் கொண்டுசெல்லப் பயன்படுத்தப்பட்ட குழாய்கள் தனிச் சிறப்பு பெற்றவை. ஒரு அடி அளவிலான குழாயின் மேல் சுண்ணாம்புக் கலவை, சுடு மண் போன்றவற்றைக் கொண்டு மூடிப் புதைத்து நீரைக் கொண்டு சென்றுள்ளனர். இக்குழாய் யானை ஏறி நின்றாலும் தாங்கும் அளவுக்கு வலிமையானதாக இருந்துள்ளது. இவ்வாறு மழைநீரைச் சேமிக்க தஞ்சாவூர் நகரில் மட்டும் 50 குளங்களை மன்னர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.
ஆனால், தற்போது அவை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில் கூட பராமரிக்கப்பட்டு வந்துள்ளன. அதன்பிறகே இந்த குளங்கள் குப்பைமேடாகிவிட்டன.
ஆனால், ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் தஞ்சாவூர் பெரிய கோயில் வளாகத்தில் விழும் மழைநீர் இன்றளவும் சாளவம் வழியாகத்தான் சிவகங்கை குளத்துக்குச் செல்கிறது என்கிறார் மணி.மாறன்.
- வி.சுந்தர்ராஜ்