தஞ்சைப் பெரிய கோயில்

பழையாறையும் ராஜராஜனும்

செய்திப்பிரிவு

உறையூரைச் சோழர்கள் அரசியல் தலைநகராகக் கொண்டாலும் தங்கள் வாழ்விடமாகத் தேர்வு செய்த நகரம்தான் கும்பகோணம் அருகே உள்ள பழையாறை. 1000 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பெற்ற அவ்வூர் சோழப்பேரரசர்கள் ஆட்சி செய்த காலத்தில் தமிழக வரலாற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற பெருநகரமாக விளங்கியது. மாமன்னன் இராஜராஜ சோழன் காலம் வரை பழையாறை என்றழைக்கப்பட்ட இந்நகரம், இராஜேந்திர சோழன் காலம் முதல் ‘முடிகொண்ட சோழபுரம்’ என்ற சிறப்புப் பெயரினைப் பெற்றது.

ராஜராஜன் சோழன் தங்கியிருந்த இடம் இன்று சோழன்மாளிகை எனவும், சோழப்பேரரசின் படைகள் இருந்த இடம் ஆரியப்படையூர், பம்பப்படையூர், புதுப்படையூர், மனப்படையூர் எனவும், உடை வாள்கள் தயாரித்த இடம் உடையாளூர் எனவும் வழங்கலாயிற்று.

ராஜராஜ சோழன் திருக்கோயிலூரில் கி.பி. 985-ம் ஆண்டு பிறந்து பின்னர் சோழப்பேரரசராக முடிசூட்டிக் கொண்டு தென்னிந்தியா முழுவதும் தனது பேரரசை விரிவுபடுத்தினார். தென்னிந்தியாவில் தனக்கு நிகர் யாரும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் பல சிற்றரசர்களை வெற்றி பெற்று வந்தார்.

அப்போது தன்னுடைய வாழ்நாளில் ஏதாவது சாதிக்க வேண்டும் என கருதிய ராஜராஜன் தன்னுடைய தெய்வபக்தியையும், கலை ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தஞ்சை பெரியகோயிலை கி.பி.1010-ம் ஆண்டில் கட்டி முடித்தார்.

பின்னர் கி.பி.1012-ம் ஆண்டில் ராஜராஜ சோழன் தனது பட்டத்தை துறந்து தன் மகன் ராஜேந்திர சோழனுக்கு முடிசூட்டினார். பின்னர் மகனது ஆட்சிக் காலத்தில் தன்னுடைய வாழ்நாளை பழையாறையில் கழித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தன் மூதாதையர் மீது போர் தொடுத்ததற்கு பழிவாங்கும் நோக்கத்தில் சோழப்பேரரசு மீது போர்தொடுத்து பழையாறை, சோழன்மாளிகை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அழித்தார். சோழன்மாளிகை கிராமத்தில் பல இடங்களில் இன்றும் பழமையான கட்டடங்களில் சோழர்பாணி கட்டுமானங்கள் எஞ்சியுள்ளதால் பழையாறை வரலாற்றில் மறக்கவும் மறுக்கவும் முடியாத ஊராக திகழ்கிறது.

ராஜராஜசோழனின் மனைவிகளில் ஒருவரான பஞ்சவன்மாதேவி இறந்த பின் பட்டீஸ்வரம் அருகே அவரை அடக்கம் செய்து பள்ளிப்படை கோயில் ஒன்றை முதலாம் ராஜேந்திர சோழன் எழுப்பியுள்ளதால், இந்த பகுதி சோழர்களின் வரலாற்றில் முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது.

- வி.சுந்தர்ராஜ்

SCROLL FOR NEXT