சோழ மண்டலத்தின் தலைநகராக விளங்கிய தஞ்சை நகரம் பரந்துபட்ட ஒரு பெரு நகரமாக விளங்குகிறது. இங்கு ஒருபுறம் காவிரியின் கிளை ஆறுகளான வெண்ணாறு, வடவாறு ஆகியவை ஓடுவதால் அப்பகுதி வண்டல், களிமண், மணல் சார்ந்ததாக விளங்குகிறது.
இப்பகுதி தஞ்சை நகரத்தின் வடபகுதியாகும். மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் வயல்கள், புன்செய் நிலங்கும் உள்ள பகுதியாக இருப்பதால் மண் அழுத்தமுடையதாக இல்லை.
நகரின் தென்பகுதி மட்டுமே செம்பாறைக் கற்களால் ஆன அழுத்தமான பகுதியாகும். குறிப்பாக கோயில் தற்போது அமைந்துள்ள நிலப்பகுதி மட்டுமே உயர் அழுத்தம் தாங்கக்கூடிய திறன் கொண்டதாக உள்ளது.
இப்பகுதியின் நிலத்தின் தாங்குதிறன் குறித்து ஆராய்ந்ததில் ஒரு சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தின் தாங்குதிறன் 162 டன்களாகும். ஆனால், பெரிய கோயில் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்ட கற்களின் எடையை வைத்துப் பார்க்கும்போது இந்த நிலப்பகுதியில் அதிக அளவாக 47.40 டன் எடையே கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது.
எனவே, மாமன்னன் ராஜராஜனின் தலைமை தச்சரான குஞ்சரமல்லன் எனும் பெருந்தச்சன் இத்தனை பெரிய விமானம், கோபுரம் ஆகியவற்றின் எடையைத் தாங்கும் திறனுடைய நிலத்தைத் தேர்வு செய்தே கோயிலைக் கட்டியுள்ளார்.
விமான கோபுரம், கேரளாந்தகன் மற்றும் ராஜராஜன் நுழைவு வாயில் ஆகியவை ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் புதுப்பொலிவுடன் திகழ்வதற்குக் காரணம் சரியான தாங்குதிறன் உடைய நிலத்தைத் தேர்வு செய்ததுதான் என்றால் அது மிகையல்ல.
- வி.சுந்தர்ராஜ்