கட்டுக் கதைகளுக்குள் சிக்கியிருந்த பிரமிப்பூட்டும் பிரம்மாண்டமான தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றிய உண்மைகள் 1886-ல் இருந்து தான் வெளிவர தொடங்கின.
இக்கோயில் மனித சக்தியால் கட்டப்பட்டிருக்க முடியாது, அதை மீறிய அமானுஷ்யத்தால் தான் இது சாத்தியம் என நம்பப்பட்டு வந்த நிலையில், அக்கோயிலின் கல்வெட்டுகளைப் படியெடுத்துக் கொண்டிருந்த ஹூல்ஸ் இது ராஜராஜன் எனும் மன்னனால் கட்டப்பட்டது என்பதை அதன் பிறகே சிறிது சிறிதாக அவ்வானுயர்ந்த கோபுரத்தின் மீது ஒளிவிழ ஆரம்பித்தது.
ஆனால், இன்றளவும் அதன் மீதான பிரமிப்பு அடங்கியபாடில்லை. நாளுக்கு நாள் உண்மை வெளிப்பட அதன் மீதான ஈர்ப்பு கூடிக்கொண்டே தான் இருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுகளை ஆவணப்படுத்திய ஆங்கிலேயர்கள் அதன் கட்டுமானம் தொடர்பான ஆய்வில் ஆர்வம் காட்டவில்லை. 1792-ல் தாமஸ் என்பவரும் வில்லியம் டேனியல் என்பவரும் இதுகுறித்த தகவல்களைச் சேகரித்து லண்டனில்
1798-ல் ஒரு நூலை ‘ஓரியன்டல் சீனரியல்’ பதிப்பகத்தார் வெளியிட்டனர். அது பின்பு பலமுறை பதிப்பிக்கப் பெறும் அளவுக்கு அந்நூல் பிரபலமானது.
ஆனால், இதைப் பற்றிய தமிழாக்கம் 1935-ல் சோமசுந்தரம் பிள்ளை விரிவான முறையில் எழுதும் வரை எதுவும் வெளிவரவில்லை. 1977-ல் சிவராமமூர்த்தி என்பவர் முறையான விவரிப்புடனான எழுத்தாக்கத்தை 1960-ல் தனது கையடக்கப் பிரதியில் விரிவாக வெளியிட்டார்.
இவையாவும் தஞ்சை பெரிய கோயிலின் கலையை வியந்தும் பிற விவரங்களை இணைத்தும் வந்ததே ஒழிய தொழில்நுட்பங்களை ஆராயவில்லை. 1969-ல் வோல் வாகன் என்பவரால் கட்டுமான வரைபடம் உட்பட பல செய்திகள் உள்ளடங்கிய ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இந்திய தொல்லியல் துறையின் விரிவான ஆய்வில் அளவுகள் மற்றும் வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தாலும், அவை வெளியிடப்படவில்லை.
முயற்சிகள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டே தான் இருந்தன. பலர் இதன் நுட்பத்தையும் அளவுகளையும் அறுதியிட முயன்று, முன்பு வெளி வந்ததையே மறு பிரசுரமாகத் தான் வெளியிட்டனர்.
1985- 1992 வரை விரிவான முறையில் கள ஆய்வு மேற்கொண்டு துல்லியமான அளவுகளையும் ஆய்வு முறையையும் டெல்லி இந்திரா காந்தி தேசிய கலை அறிவியல் மையத்தைச் சேர்ந்த டாக்டர் கபில வாத்ஸ்சாயனன் தலைமையில் புதுவை பிரெஞ்ச் கலாச்சார மையத்துடன் இணைந்து செய்தது. அப்பெரும் முயற்சியை பிரெஞ்ச் ஆர்க்கிடெக்ட் பியார் பிட்சர்ட் என்பவர் நிறைவேற்றினார்.
இந்நூலில் தஞ்சை பெரிய கோயிலின் அளவுகள் விரிவாக ஆராயப்பட்டு, தெளிவான தொழில்நுட்ப வரைபடங்கள் உருவாக்கி வெளியிடப்பட்டன. எவ்வளவு வெளியீடுகள் வந்தாலும் ஏதோ ஒன்று இன்றும் புதியதாக வெளிப்பட்டுக் கொண்டே தான் இருக்கின்றது. தஞ்சை பெரிய கோயில் தலையாட்டி பொம்மை நுட்ப அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது என்பது போன்ற புனைவுகளோடு, நிழல் விழாது எனும் கதைகளும் அவற்றில் அடங்கும். மூலவன் இராசராசனும் குஞ்சரமல்ல பெருந்தச்சனும் நினைத்துப் பார்க்காத கற்பனைக் கதைகள் இவ்வரிய படைப்பைச் சுற்றி இன்றளவும் படருகின்றன.
தமிழகக் கோயில் கட்டுமானக் கலையின் புலிப்பாய்ச்சல் இவ்வரிய கட்டுமானம். மரபு வழி நின்று அதுவரை நிகழ்ந்திராத ஒன்றை தெளிவான நோக்கம், திட்டம், செயல் வரையறை கொண்டு நிகழ்த்திக் காட்டப்பட்ட அற்புதம் இது. திட அறிவுடன் சவால்களை எதிர்கொண்டு சாதிக்கப்பட்ட தமிழ் மண்ணின் அடையாளமான இப்பெரிய கோயில், இன்று உலக மரபுச் சின்னம்.
ஒரு மடங்கு அகலத்தை இரு மடங்கு நீளமாக்கி, ஒரு செவ்வகத்தை உருவாக்கி அதனுள் இரு சதுரங்களை உள்ளடக்கியதில், அதன் முதல் வெற்றி தொடங்குகிறது. இப்படியும் சொல்லலாம். இரு சதுரங்களை இணைத்து ஒரு செவ்வகம் உருவானதில் தான் இதன் அடிப்படை உள்ளது எனலாம்.