தஞ்சாவூர் பெரிய கோயிலின் ராஜராஜன் கோபுரத்திலும், மகாமண்டபத்தின் வாயிலிலும் உள்ள துவாரபாலகர் சிற்பங்கள் பார்க்கப் பார்க்க பிரமிப்பை ஊட்டுபவை.
இந்த துவாரபாலகர்களின் சிற்பங்களின் காலடியில் ஒரு பாம்பு யானையை விழுங்கும் சிற்பம் உள்ளது. துவாரபாலகரோ ஒரு கரத்தை கதையின் மீது இருத்தி, ஒரு கரத்தால் தர்ஜனி என்னும் எச்சரிக்கை முத்திரை காட்டி, மேலிரு கரங்களில் ஒன்றால் ஈசன் இருக்கும் திசையைக் காட்டுவதுடன், மறுகரத்தை தலைக்குமேல் உயர்த்தி பெருவியப்பைச் சுட்டிடும் விஸ்மயம் எனும் முத்திரையைக் காட்டுகிறார்.
இச்சிற்பத்துக்கு முன் நின்றுகொண்டு அங்குக் காணும் யானையை உண்மையான யானையின் அளவாகக் கொண்டு அதே விதிதத்தில் அச்சிற்பத்தை நோக்குவோமாயின் துவாரபாலகரோ வானத்தளவு நம் கற்பனையில் தோன்றுவார். அவர் விமானத்தின் உள்ளே ஈசனைச் சுட்டி விஸ்மயம் எனும் பெருவியப்பைக் காட்டும்போது அங்கே பிரபஞ்சமே ஈசனாக இருப்பதை உணரலாம்.
- வி.சுந்தர்ராஜ்