தஞ்சாவூர் பெரிய கோயிலில் தற்போதைய நந்தி மண்டபத்துக்கு தெற்கே உள்ள திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி உள்ள நந்தியே இராஜராஜனால் பெருவுடையாருக்கு எதிரே அமைக்கப்பட்டதாகும்.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தற்போதைய பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீட்டர், நீளம் 7 மீட்டர், அகலம் 3 மீட்டர் ஆகும். நந்தி மண்டபம் தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது.
பின், தஞ்சை நாயக்க மன்னர்கள் சிவலிங்கத்துக்கு இணையான பெரிய நந்தியை நிறுவினர். முதலில் அமைக்கப்பட்ட நந்தி கேரளாந்தகன், இராஜராஜன் வாயில்களுக்கு இடைப்பட்ட பகுதிக்கும் பின்னர் திருச்சுற்று மாளிகைக்கும் இடம் மாற்றப்பட்டது.
ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ள நந்தி 20 டன் எடை கொண்டதாகும். இந்த நந்தியம் பெருமான், லேபாக்ஷி கோயில் நந்திக்கு அடுத்தபடியாக இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய நந்தி ஆவார். தற்போது இந்த நந்தியம் பெருமானுக்கு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷத்தின்போது, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
இராஜராஜனால் திருச்சுற்று மாளிகையில் வடதிசையை நோக்கியபடி அமைக்கப்பட்ட நந்தி.
மேலும் வருடத்தில் ஒரு சில நாட்களில் வரும் சனிப்பிரதோஷம் மிகவும் விசேஷமாக கருதப்படுவதால், அன்றைய தினம் நந்தியம் பெருமானுக்கு சிறப்பாக அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நந்தியம் பெருமானை வழிபடுகின்றனர்.
ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் நாளன்று கோயிலில் 108 கோ பூஜை நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் நந்தியம் பெருமானுக்கு டன் கணக்கில் காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்படுகிறது. அப்போது திரளான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
- வி.சுந்தர்ராஜ்