திருச்சுற்றில் உள்ள கணபதி ஆலய வாசலில் இருபுறமும் உள்ள ஒரு கல்வெட்டுத் தொகுதி, விநாயகருக்கு நாள்தோறும் வாழைப்பழம் படையிலிட ராஜராஜன் ஆணை வழங்கியதைக் கூறுகிறது. அதன்படி, தினமும் 150 வாழைப்பழங்களை வழங்க அம்மன்னன் 360 காசுகள் வழங்கியுள்ளான்.
நாளொன்றுக்கு 150 பழங்கள் வீதம் ஓராண்டுக்கு 54 ஆயிரம் பழங்களை வழங்குவதற்கு நிலைத்த மூலதனமாக 360 காசுகளை பண்டாரத்தில் இட்டான். இம்மூலதனத்தை வணிகர்களுக்கு வட்டிக்கு (பொலிசை) கொடுத்து அதன் மூலம் வரும் 45 காசுகள் மூலம் இந்த 54 ஆயிரம் பழங்களை வழங்க வேண்டும். இதன் மூலம் ராஜராஜன் காலத்தில் ஓராண்டு என்பது 360 நாட்கள் மட்டுமே கொண்டது என அறியலாம். அன்றைய விலைவாசிப்படி ஒரு காசுக்கு 1,200 வாழைப் பழங்களை வாங்கலாம்.
இம் மூலதனத்தை தனியாராகிய தஞ்சாவூர் புறம்பாடி நித்த வினோதப் பெருந்தெரு வணிகர்கள் 60 காசுகள் பெற்று அதன் வட்டியாக தினம் 25 பழங்களும், திரிபுவன மாதேவி பேரங்காடி வணிகர்கள் 60 காசுகள் பெற்று அதற்கான வட்டியாக நாள்தோறும் 25 பழங்களும், மும்முடிப் பெருந்தெரு வணிகர்கள் 120 காசுகள் பெற்று அதற்காக 50 பழங்களும், வீரசிகாமணிப் பெருந்தெரு வணிகர்கள் 120 காசுகள் பெற்று அதன் பொருட்டு வட்டியாக தினமும் 50 பழங்களும் ஆகக் கூடுதலாக 150 பழங்கள் வணிகர்களால் வழங்கப்பட்டிருக்கிறது. இம்மூலதனத்தின் வட்டி வருவாயான வாழைப்பழம் வழங்கும் திட்டத்தை கோயில் நிர்வாகிகளும், மக்களும் கண்காணித்து நிர்வகித்தனர். இதற்காக கல்வெட்டு சாசனமும் அதன் உள்ளடக்கமும் பொதுமக்கள் பார்வையில் படுமாறு வாயிலின் இருபக்கமும் பொறிக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தனியார் மற்றும் பொதுமக்கள் பங்குபெறும் நவீன இக்காலத் திட்டம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ராஜராஜனால் நடைமுறைப்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது.
-இரா.கோமகன், வரலாற்றாளர்,
தலைவர், கங்கைகொண்ட மேம்பாட்டுக் குழுமம்.