கி.பி.880-ம் ஆண்டு காலகட்டத்தில் சிறப்புப் பெற்றிருந்த பல்லவ மன்னன் அபராஜித வர்மருக்கும், பாண்டிய மன்னன் வரகுண பாண்டியனுக்கும் இடையில் திருப்புறம்பியம் என்னும் இடத்தில் போர் நடைபெற்றது. இப்போரில் பல்லவர்களுக்கு ஆதரவாகச் சோழர்களும், பாண்டியர்களுக்கு ஆதரவாக முத்தரையர்களும் போரிட்டனர்.
அபராஜித வர்மனுக்குத் துணையாக கங்க நாட்டு மன்னன் பிரதிவீபதி வந்திருந்தார். இப்போரில் விஜயாலயச் சோழனின் மகன் முதலாம் ஆதித்தன் சோழப் படையின் மாதண்ட நாயக்கராகப் போரிட்டார். அந்த நேரத்தில் விஜயாலயச் சோழன் இரு கால்களும் செயலிழந்த நிலையில், தன் மகனின் வீரத்தை போர்க்களத்தில் காண்பதற்காக பல்லக்கில் சென்றிருந்தார். அங்கே போர் முகாமில் பல்லவ- சோழப் படைகள் கிட்டத்தட்ட தோல்வியடைந்து சரணடையும் முடிவுக்கு வந்ததைக் கேள்விப்பட்டு கோபமடைந்த விஜயாலயச் சோழன், இரு வீரர்களின் தோளில் ஏறிக்கொண்டு வாளைச் சுழற்றிக்கொண்டு போரில் களமிறங்கினார்.
இதைக் கண்ட சோழப் படையினர் மீண்டும் துணிவுடன் போராடி வெற்றி பெற்றனர். கங்க மன்னன் பிரதிவீபதி இப்போரில் வீர மரணம் எய்தினார். இப்போரின் மூலம் முத்தரையர்களை வீழ்த்தி சோழர்கள் தஞ்சையை தம் தலைமையின் கீழ் கொண்டு வந்தனர்.
இப்போரில் பல்லவர்கள் வெற்றி பெற்றாலும் அவர்கள் வலிமை மிக வெகுவாக குறைந்தது. வரகுண பாண்டியனை கொள்ளிடம் ஆற்றைக் கடந்து விரட்டிச் சென்றார் விஜயாலயச் சோழன். அப்போது தொடர்ந்து மீன் கொடியுடன் ஓடினால், தனக்கு ஆபத்து வந்துவிடும் என்பதால், மீன் கொடியை சுருட்டிகொண்டு வரகுண பாண்டியன் ஓடியதால், மீன் கொடியை சுருட்டிய இடம்தான் தற்போது மீன்சுருட்டி என்ற ஊராக விளங்குகிறது.
திருப்புறம்பியத்தில் சோழர்களுக்கும், முத்தரையர்களுக்கும் நடைபெற்ற போரில் ஆயிரக்கணக்கான வீரர்கள் வீரமரணம் அடைந்ததால், போரின்போது காயம் ஏற்பட்டு சிந்திய ரத்தமாக அப்பகுதி இருந்ததால், அப்பகுதிக்கு உத்திரை என்று பெயர் விளங்கலாயிற்று. கங்க மன்னன் பிரதிவீபதி வீரமரணம் அடைந்த இடத்தில் நடுகல் நடப்பட்டது. பின்நாளில், நடுக்கல் நடப்பட்ட பகுதியில் பகவதி அய்யனார் கோயிலை சோழர்கள் கட்டினர்.
சோழ மன்னர்களுக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய இந்தப் பகுதிதான் இப்போது திருப்புறம்பியமாக மருவி விட்டது. அந்த போரில் இறந்த வீரர்களை அடக்கம் செய்த இடத்துக்கு பாலிபடுகை எனப் பெயர் என்று வரலாறு கூறுவதுண்டு.
தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜ சோழனின் தாத்தாவாகிய விஜயாலயச் சோழன், சோழர் சாம்ராஜியத்தை மீண்டும் எழச் செய்தவர். விஜயாலயச் சோழன் காலத்தில் கட்டப்பட்ட பகவதி அய்யனார் கோயில், தற்போது சிதிலமடைந்த நிலையில் இந்தப் போரை இன்றும் நினைவூட்டும் சாட்சியமாக விளங்குகிறது.
-வி.சுந்தர்ராஜ்