ஆயுத கோபுரம். 
தஞ்சைப் பெரிய கோயில்

எதிரிகளை ஏமாற்ற ஆயுத கோபுரம்

செய்திப்பிரிவு

தஞ்சாவூரில் நாயக்க மன்னர் காலத்தில் கட்டப்பட்ட அரண் மனையைச் சுற்றிலும் மிகப்பெரிய சுற்றுச்சுவர் உள்ளது. இந்த அரண்மனை வளாகத்தில் 7 அடுக்குகளைக் கொண்ட கோயில் போன்ற கட்டுமான தோற்றத்தை ஏற்படுத்தும் ஆயுத கோபுரம் உள்ளது.

எதிரிநாட்டினர் தஞ்சாவூர் மீது படையெடுத்து வந்தால் இந்த கோபுரத்திலிருந்து கண்காணித்து அவர்களைத் தாக்க இது கண்காணிப்பு கோபுரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல இந்த கோபுரத்தின் கீழ் படைவீரர்கள் நிறுத்தப்பட்டு, படைவீரர்களுக்கான போர்க்கருவிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் இதனை ஆயுத கோபுரம் என அழைத்துள்ளனர்.

எதிரி நாட்டினர் வந்தால், இதைப் பார்த்துவிட்டு கோயில் என்று கருதிச் சென்றுவிடுவார்கள். இந்தப் பகுதியைத் தாக்க மாட்டார்கள் என்று திட்டமிட்டு எதிரிகளை ஏமாற்றும் விதமாக நாயக்கர் காலத்தில் அறிவுக்கூர்மையுடன் இந்த கோபுரத்தைக் கட்டியுள்ளனர்.


ஆயுத கோபுரத்தின் கீழே உள்ள தர்பார் மகாலின் ஒரு பகுதி

இந்த கோபுரத்தின் கீழேயே அவசர காலத்தில் அரசர் சபையை கூட்டுவதற்கு ஏதுவாக, மின் தர்பார் மகால் உள்ளது. எதிரி மன்னர்கள் யாரேனும் போர் தொடுத்து தஞ்சையைத் தாக்க வந்தால், உடனடியாக கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி அதைக் கண்காணித்து உடனுக்குடன் தகவலை கூறவும், முக்கிய முடிவுகள் எடுக்கவும் இந்த தர்பார் மகால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த ஆயுத கோபுர வளாகம் தற்போது அருங்காட்சியகமாக செயல்பட்டு வருகிறது. இந்த கோபுரத்தின் முதல் அடுக்கில் பழங்கால திமிங்கலத்தின் 92 அடி நீள எலும்புக்கூடு காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் கண்டறியப்பட்ட பழங்காலக் கற்சிலைகள் உள்ளிட்ட பல்வேறு சிலைகள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 2016-ம் ஆண்டு ரூ.65 லட்சம் செலவில் இந்த ஆயுத கோபுரத்தில் ஒலி- ஒளிக்காட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. தற்போது தஞ்சாவூரின் வரலாறு இங்கு தினமும் மூன்று காட்சிகளாக பொதுமக்களுக்கு திரையிடப்பட்டு வருகிறது.

- வி.சுந்தர்ராஜ்

SCROLL FOR NEXT