தஞ்சைப் பெரிய கோயில்

சோழர்களால்  திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நகரம்

செய்திப்பிரிவு

இலங்கையையும், தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும் வெற்றிகொண்டு, வலிமை மிகுந்த பேரரசாக விளங்கியது சோழப் பேரரசு. வட இந்திய மன்னர்களும், தென்கிழக்காசிய மன்னர்களும் கூட சோழர்களின் வலிமையை உணர்ந்திருந்தனர்.

மத்திய காலப் பகுதியில் பேரரசாக வளர்ந்து நின்ற சோழர்களின் மூதாதையர்கள் சங்க காலம் முதலே தமிழகத்தின் உறையூரைத் தலைநகராகக் கொண்டு அரசாட்சி புரிந்தவர்கள். இம்மரபில் வந்த விசயாலயச் சோழன் கி.பி. 850-ம் ஆண்டு வாக்கில் அப்போதிருந்த பல்லவ, பாண்டிய, முத்தரைய மன்னர்களை வெற்றிகொண்டு சோழப் பேரரசை நிறுவுவதற்கான அடித்தளத்தை அமைத்தவராவார்.

காவிரிப் படுகையின் தென்மேற்குப் பகுதியில் வடவாற்றின் தென்கரையில் அமைந்திருந்த தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர், நிலவியல் மற்றும் அமைவிட வகையால் சிறப்பிடம் பெற்றது.

கி.பி.10- 11-ம் நூற்றாண்டுக் கல்வெட்டுகளில் தஞ்சை என்று சுட்டப்படும் இவ்வூரைச் சுற்றியமைந்த பகுதியின் பல்வேறு சிற்றூர்கள் இணைந்த பகுதி முத்தரையர்களால் ஆளப்பெற்றது. ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இது சோழர்கள் வசமாயிற்று.

கி.பி.985 முதல் 1014 வரை ஆட்சிபுரிந்த சோழ அரசின் மாமன்னன் முதலாம் இராஜராஜனின் தலைநகரமான இந்நகரில் ராஜராஜேச்சுவரம் உடையார் கோயிலைக் கட்டியதன் மூலம் மிகப் பெரும் பெருமையை அடைந்தது.

இப்பெருங்கோயில் கட்டப்பட்டதன் மூலம் பக்தி அடிப்படையிலான விழாக்கள் மலிந்த நகரமாகவும் தஞ்சாவூர் மாறியது. நகரின் நடுவில் கோயிலும், கோயிற் பணியாளர்கள், அரசு அதிகாரிகள் வாழும் கோயிலைச் சுற்றி ‘உள்ளாலை’ எனும் உள்நகரமும், பல்வேறு கைவினைஞர்கள் வாழும் ‘புறம்படி’ எனும் வெளி நகரமும் என நன்கு திட்டமிடப்பட்டு இந்நகரம் உருவாக்கப்பட்டது.

இத்தனைச் சிறப்புடன் உருவாக்கப்பட்ட தஞ்சை நகரம், இராஜராஜனின் மறைவுக்குப்பின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டதால் தற்காலிகமாகத் தன் பெருமையில் குறைவுற்றது. நாயக்கர், மராட்டியர்களின் ஆட்சிக் காலத்தில் மீண்டும் தன் பழைய பெருமிதத்தை அடைந்தது. நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தஞ்சை பெருங் கோயிலுக்கு அரண் கட்டப்பட்டது. மிகப்பெரிய நந்தியும், சுப்பிரமணியருக்கு திருச்சுற்றில் தனிக் கோயிலும் இக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது. கோயிலுக்காக தரிசு நிலங்கள் பயன்படுத்தப்பட்டன. நீர்நிலைகள் சீர் செய்யப் பெற்றன. பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ரகுநாத நாயக்கர் தன் அரண்மனையில் அரங்கம் ஒன்றை உருவாக்கினார்.

கி.பி.1675-ல் தஞ்சாவூர் மராட்டியர் கைக்குள் வந்தது. மராட்டிய அரசர் ஷாஜி, அரண்மனையை மேலும் மேம்படுத்தி திருவோலக்க மண்டபத்தைக் கட்டினார்.

பல்வேறு துறை சார்ந்த அறிவுச் செல்வங்களான ஓலைச்சுவடிகள் தொகுக்கப்பட்டு, சரஸ்வதி மஹால் சுவடியகத்தில் பாதுகாக்கப்பட்டன. நகரில் ராஜகோபால சுவாமி கோயில் கட்டப்பட்டதால் ஊருக்கு மேலும் பொலிவு சேர்ந்தது. எளியோரும் பயன்பெறும் வகையில் அதிக அளவிலான வழிப்போக்கர் மண்டபங்களும், சத்திரங்களும் தஞ்சாவூரில் கட்டப்பட்டன. கி.பி.1855-ம் ஆண்டின் இறுதியில் தஞ்சை மராட்டிய மன்னன் சிவாஜிக்கு வாரிசு இல்லாத நிலையில், தஞ்சாவூர் ஆங்கிலேயர் ஆட்சியில் இணைத்துக் கொள்ளப்பட்டது.

வளர்ந்து வரும் நிலையில் இருந்த வலிமை வாய்ந்த ஆங்கிலேயர், சிறிய அரச மரபுக்குரியதாக இருந்த தஞ்சாவூரை சிறப்பான பொருளாதார மையமாக மாற்றினர்.

- வி.சுந்தர்ராஜ்

SCROLL FOR NEXT