விவாதக் களம்

விவாதக் களம்: ஹைதராபாத் என்கவுன்ட்டர்; உங்கள் கருத்து என்ன? 

செய்திப்பிரிவு

தெலங்கானா மாநிலம் ஷம்சாபாத் சுங்கச் சாவடி அருகே கடந்த மாதம் 27-ம் தேதி 27 வயது கால்நடை பெண் மருத்துவரை, நால்வர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக் கொன்றனர். இந்தக் கொடூரக் கொலையில் சிவா, சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய லாரி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வந்தது. இந்த வழக்கில் விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் வகையில், சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில், வழக்கு விசாரணைக்காக குற்றம் நடந்த இடமான சட்டன்பள்ளிக்கு குற்றவாளிகள் 4 பேரும் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, அவர்கள் தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, சிவா, சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய 4 பேரையும் போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

குற்றவாளிகளுக்குத் தூக்கு தண்டனை விதிக்க பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டனப் பேரணியில் நடத்திய நிலையில் இன்று குற்றவாளிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் துறையின் என்கவுன்ட்டரை ஹைதராபாத் மாணவிகள் மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். நிர்பயாவின் தாய், கால்நடை பெண் மருத்துவரின் தந்தை என்று பாலியல் பலாத்காரத்தில் தங்கள் மகள்களை இழந்த பெற்றோர்களும் காவல் துறையின் இந்த நடவடிக்கை நியாயமானது என்று வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறிய அரசியல் கட்சித் தலைவர்களும் 'என்கவுன்ட்டர் தவறு இல்லை' என்று கூறியுள்ளனர். சிலர் மட்டும், 'நீதிமன்றம் மூலம் தண்டனை கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், இதற்கு என்கவுன்ட்டர்தான் தீர்வா?' என்று கேட்டுள்ளனர்.

இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து வாசகர்களாகிய உங்கள் கருத்துகளை எதிர்நோக்குகிறோம்.

இது குறித்து உங்கள் கருத்து என்ன? விவாதிக்கலாம் வாருங்கள். உங்கள் கருத்துகளை விரிவாகப் பதிவு செய்யுங்கள்.

SCROLL FOR NEXT