தமிழகத்தின் அழிந்துகொண்டிருக்கும் வாழ்வாதாரங்கள், கலைகள் ஆகியவற்றை தன்னுடைய 'நைன் ருபீஸ் ஆன் ஹவர்' (Nine Rupees An Hour) எனும் புத்தகத்தில் ஆவணப்படுத்தியுள்ளார் பத்திரிகையாளர் அபர்ணா கார்த்திகேயன். வாழ்வாதார சரிவை எதிர்கொண்டிருக்கும் மக்களின் குரலிலேயே புத்தகம் முழுக்க அவர்களின் துன்பியல் வாழ்க்கையை தன் எழுத்தின் வழியே உணர்த்தியிருக்கிறார் அபர்ணா.
பத்திரிகையாளர் அபர்ணா கார்த்திகேயன்
ஒரு வாரத்திற்கு 100 பனை மரங்களை ஏறும் பனையேறி ராயப்பன், இசை கொடுக்கும் நாதஸ்வரங்களை உருவாக்கும் செல்வராஜ், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சேலை டிசைன்களை தன் கையாலேயே நெய்திருக்கும் கைத்தறி நெசவாளர் கிருஷ்ணமூர்த்தி, அழகிய வேலைப்பாடுகளைக் கொண்ட சில்க் படுக்கை விரிப்புகளை நெய்யும் ஜீனத், தன் வாழ்வின் பெரும்பகுதி முழுதும் பொய்க்கால் குதிரை ஆடும் காமாட்சி, பரதத்தில் உள்ள சமூக தடைகளை உடைத்தெறியும் காளி, அரிவாள் தயாரிக்கும் சந்திரசேகரன், விவசாயி போதுமணி என நாம் நினைத்தாலே மலைத்துப் போகச் செய்யும் அசாதாரண வேலைகளை செய்யும் சாமானியர்கள் இந்த புத்தகத்தில், தங்களின் வாழ்வாதாரம் தங்கள் கண் முன்னே சிதைந்து போவதை பகிர்ந்துள்ளனர். "எங்களுடன் இது முடிய வேண்டும்," என்பதுதான் இவர்கள் அனைவரின் ஒரே குரலாக உள்ளது.
இந்த புத்தகத்தின் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று (நவ.16) 'மெட்ராஸ் லிட்ரரி சொசைட்டி' நூலகத்தில் நடைபெற்றது. 'PARI' இணையதளம் மூலம் கிராமப்புற வாழ்வாதாரத்தை தன் இதழியல் மூலம் ஆவணப்படுத்தி வரும் மூத்த பத்திரிகையாளர் சாய்நாத் இந்த புத்தகத்தை வெளியிட, 'தி இந்து' குழுமத்தின் இயக்குநர் நிர்மலா லட்சுமண் பெற்றுக்கொண்டார். இந்த புத்தகத்தில் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்துகொண்ட பலரும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.
புத்தகத்தை வெளியிட்டு பத்திரிகையாளர் சாய்நாத் பேசியதாவது:
"பல நூற்றாண்டு அறிவை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் ஆச்சரியப்படத்தக்க வகையிலான மக்களின் திறன்களை இந்த புத்தகத்தில் அபர்ணா கார்த்திகேயன் வெளிக்கொணர்ந்துள்ளார். இந்த புத்தகத்தில் பேசப்பட்டிருக்கும் மக்கள் தங்கள் வாழ்க்கையில் செய்யும் தொழில்கள் நம்ப முடியாதவையாக இருக்கும்.
கடினமான உழைப்பை செலுத்தி, பனை மரங்கள் ஏறும் தொழில் செய்பவர்களுக்கு, இந்த சமூகம் என்ன மரியாதையை கொடுத்திருக்கிறது? அந்த தொழில் மூலம் அவர்களுக்கு என்ன வருமானம் கிடைக்கிறது? நடிகர்களுக்கு எளிதில் கிடைக்கும் மரியாதை, பல ஆண்டுகளாக பொய்க்கால் குதிரை ஆட்டக் கலையை வாழ வைத்துக்கொண்டிருக்கும் காமாட்சிக்கு கிடைப்பதில்லை.
சிறந்த இதழியல் என்பது என்ன? நல்ல இதழியலாளர்களை எது உருவாக்குகிறது? சிறந்த இதழியல் என்பது, சமகாலத்தின் தேவைக்கேற்ப ஆக்கச் செயல்களில் ஈடுபடுவதாக இருக்க வேண்டும். இந்தியாவின் சிறந்த இதழியலாளர்கள் யார்? காந்தி, பகத்சிங், அம்பேத்கர். பலரும் காந்தி, பகத்சிங், அம்பேத்கர் போன்றோரை சிறந்த பத்திரிகையாளர்களாக ஏற்க மாட்டார்கள்.
இங்கு அமர்ந்திருக்கும் எத்தனை பத்திரிகையாளர்கள், பத்திரிகைகள் மற்றும் இதழ்களில் 100 தொகுதிகள் அடங்கிய எழுத்துப்பணிகளை பிரசுரித்திருக்கிறீர்கள்? அம்பேத்கர் பிரசுரித்திருக்கிறார். பகத்சிங்கை நமக்கு அரசியல் தியாகியாகத்தான் தெரியும். ஆனால், அவர் ஒரு தொழில்முறை பத்திரிகையாளர். கணக்கிடப்பட முடியாத அளவுக்கு பகத்சிங் இதழ்களில் எழுதியுள்ளார். இந்தி, உருது, பஞ்சாபி, ஆங்கிலம் ஆகிய 4 மொழிகளில் எழுதியிருக்கிறார்.
அவர்களை துணிந்து எழுந்து நிற்க வைத்தது என்ன? அவர்கள் தங்கள் காலத்தின் சிறந்த ஆக்கச் செயல்களில் ஈடுபட்டனர். அம்பேத்கர், மானுடர்களின் மரியாதைக்காக இப்பூமியில் நடந்த, இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கும் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்தியும் பகத்சிங்கும் விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நம் காலத்துக்குத் தேவையான ஆக்கச் செயல்கள் என்ன? முதலாவது, கூர்மையாகவும், வேகமாகவும் வளர்ந்துகொண்டிருக்கும் சமத்துவமின்மை. நாட்டில் நுகர்வுக்காக மக்கள் செலவிடும் அளவு, கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடுமையாக குறைந்துள்ளது என சமீபத்தில் வெளியான புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. நுகர்வுக்காக மக்கள் செலவிடும் அளவு குறைந்தால் இவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆகும்?
நெசவாளர்கள் பெரும்பாலானோர் நெசவு தொழிலிலிருந்து வெளியேறி வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர். அவர்கள் ஆட்டோ ஓட்டுநர்களாக மாறிவிட்டனர்.
அடுத்தது, வாழ்வாதாரங்களின் சரிவு. அதைத்தொடர்ந்து காலநிலை மாற்றம் உள்ளிட்டவை. இவற்றை அபர்ணாவின் புத்தகம் அலசியுள்ளது.
உண்மையின் வழியாகத்தான் சிறந்த கதைசொல்லியாக பத்திரிகையாளர் உருவெடுக்க முடியும். ஒரு இடர் ஏற்படும் போது, பத்திரிகையாளர்கள் அதிகாரிகளிடம் நிலைமையை கேட்காமல், அங்குள்ள மக்கள், விவசாயிகளிடம் பேச வேண்டும். அவர்கள்தான் நம்பகமான தகவல்களை தருவார்கள், அவர்களால் தான் தர முடியும். இப்படி மக்களின் வழியாக அபர்ணா அவர்களின் வாழ்வாதாரங்களை பதிவு செய்துள்ளார்," என சாய்நாத் பேசினார்.
அதன்பிறகு பேசிய நிர்மலா லட்சுமண், "இந்த புத்தகத்தில் பேசிய மக்கள் "இந்த நிலைமை எங்களுடன் முடிந்துவிட வேண்டும்," எனக்கூறுவது மிகவும் துன்பகரமான விஷயம். ஆனால், இந்த வாழ்வாதாரங்களும், கலைகளும் அவர்களுடன் முடிந்துவிடக் கூடாது. அவர்களின் திறனை வேறு வேலைகளுக்கு மாற்றக் கூடாது, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்காக அவர்கள் செய்யும் மதிப்புமிக்க தொழில்களில் இருந்து அவர்கள் விடுபடக் கூடாது," என தெரிவித்தார்.
தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in