குடிநீர் கேட்டு ஆட்சியரை சந்தித்த கிராம மக்கள் 
ரிப்போர்ட்டர் பக்கம்

பன்னிரண்டு ஆண்டுகால குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?- ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் கிராம மக்கள் ஏக்கம்

கி.தனபாலன்

ராமநாதபுரம்

கடுமையான குடிநீர் தட்டுப்பாடு, உப்பு நீரை கொடுப்பதால் உயிரிழக்கும் கால்நடைகள் என பல்வேறு வகைகளிலும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள ஏ.மணக்குடி ஊராட்சியைச் சேர்ந்தது புதுக்காடு கிராம மக்கள்.

ஏதோ ஒரிரண்டு ஆண்டுகள் அல்ல 12 ஆண்டுகளாக இக்கிராமத்தில் வசிக்கும் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் அவலநிலை இதுவாகத்தான் இருக்கிறது.

இக்கிராம மக்கள் அனைவரும் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் செய்கின்றனர். குறைந்த வருமானத்தில் வாழ்வை நகர்த்தும் இவர்கள் கடந்த 12 ஆண்டுகளாக குடி தண்ணீரை விலைக்கு வாங்குகின்றனர்.

அதுவும் கடந்த ஓராண்டாகவே ஒரு குடம் தண்ணீர் ரூ. 10-க்கு விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகின்றனர். லாரி தண்ணீரை வாங்கி சேமிக்க ஒவ்வொரு வீட்டிலும் பிரத்யேக ட்ரம்கள் வைத்துள்ளனர். லாரி தண்ணீரும் வரவில்லை என்றால் கிணற்றில் கிடைக்கும் உப்புநீரை பயன்படுத்துகின்றனர்.

இத்தனை காலமும் இவர்கள் அரசின் கவனத்துக்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லாமல் இல்லை. ஆனால், நிரந்தமராக எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை.

அதற்காக இந்த மக்களும் ஓய்ந்துவிடவில்லை. கடந்த ஜூலை 29-ல் இக்கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவை சந்தித்து குடிநீர் கேட்டு மனு அளித்தனர்.

அப்போது ஆட்சியர் ஒரு மாதத்தில் குழாய்கள் சரி செய்யப்பட்டு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படும் எனவும், அதுவரை லாரி மூலம் குடிநீர் வழங்கபடும் எனவும் உறுதியளித்தார்.

ஆனால் ஆர்.எஸ்.மங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆட்சியரின் உத்தரவுக்கு ஒரு நாள் மட்டும் லாரி மூலம் குடிநீர் வழங்கிவிட்டு, அதை புகைப்படம் எடுத்துவிட்டுச் சென்றதோடு, அதன் பின் குடிநீர் வழங்கவில்லை என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

ஆட்சியர் உத்தரவிட்டும் அதிகாரிகள் கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், இம்மக்கள் மீண்டும் ஆட்சியர் அலுவலகத்திற்கு அலையவிட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டதுக்கு வந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்தனர். ஆட்சியர் ஒரு சில நாட்களில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து இக்கிராமத்தைச் சேர்ந்த சாந்தி என்பவர் கூறியதாவது, தனியார் குடிநீர் லாரி வரவில்லை என்றால் உப்புநீரை பயன்படுத்தும் நிலையில் உள்ளோம். கால்நடைகளுக்கும் உப்புநீரை வழங்குவதால் அவை அவ்வப்போது இறந்துவிடுகின்றன.

சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி ஆர்.எஸ்.மங்கலம் வழியாக காரங்காடு அருகே கடலில் கலக்கும் கோட்டைக்கரையாறு எங்கள் கிராமம் வழியாக செல்கிறது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆற்றில் ஒரு அடி ஆழம் தோண்டிலாக சுவையான ஊற்று நீர் கிடைத்து வந்தது. கிராமத்தைச் சுற்றிலும் இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டதால் ஆற்றில் தோண்டினாலும் உப்பு நீரே கிடைக்கிறது.

புதுக்காடு கிராம வீடுகளில் தண்ணீரை தேக்கி வைப்பதற்காக வைக்கப்பட்டுள்ள தொட்டிகள்

இதனால் குடிநீரும், விவசாயமும் அழிந்துபோனது. தற்போது எங்கள் கிராமம் டிஸ்கவரி சேனலில் காண்பிக்கப்படும் வறண்ட குடிநீர் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது.

கிழக்கு கடற்கரைச் சாலையில் கிராமம் அமைந்திருந்தாலும், பேருந்து நிற்பதில்லை. அதனால் 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள மணக்குடிக்கு பேருந்து நிறுத்தத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.

திடீரென உடல்நிலை சரியில்லாதவர்களை அவசரத்துக்கு கூட மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. எனவே குடிநீர், பேருந்து வசதி ஏற்படுத்த ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இனியாவது இக்கிராம மக்களின் குடிநீர் பிரச்சினை நிரந்தரமாக தீர்க்கப்படுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

SCROLL FOR NEXT