ரிப்போர்ட்டர் பக்கம்

திண்டுக்கல் மலைக்கோட்டையை காணவந்த கிராமப்புற மாணவர்கள்: சொந்த செலவில் மாணவர்களை அழைத்துச்சென்ற அரசுப் பள்ளி ஆசிரியர்

பி.டி.ரவிச்சந்திரன்

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ள செ.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர் ஒருவரின் சொந்த செலவில் சுற்றுலா அழைத்துவரப்பட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையைக் காண ஏற்பாடு செய்தது பெற்றோர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே செ.பாறைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் பெரும்பாலோனோர் வெளியில் எங்கும் செல்லாமல் தங்கள் வீடு உண்டு, பள்ளி உண்டு என்ற நிலையில் இருந்துவருகின்றனர்.

அவர்களுக்கு உற்சாகமூட்டும்விதமாக மாணவர்களின் காலாண்டுத் தேர்வு விடுமுறை தொடங்கிய நிலையில், ஆசிரியர் ராமு தனது சொந்த செலவில் 33 மாணவ, மாணவிகளை திண்டுக்கல் மலைக்கோட்டையை காண அழைத்துச்சென்றார்.

மலைக்கோட்டையின் மேல் ஏறிச்சென்று அங்குள்ள வரலாற்று நினைவுச்சின்னங்களான பீரங்கி, சிதைந்த நிலையில் உள்ள ஆயுதங்கள் காப்பு அறை மற்றும் திண்டுக்கல் நகரின் மேல்புற காட்சியை மலையில் இருந்து மாணவர்கள் கண்டுரசித்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து திண்டுக்கல் நகரில் உள்ள திப்புசுல்தான் மணிமண்டபம், மாவட்ட மையநூலகம், குமரன் பூங்கா ஆகிய இடங்களுக்கும் அழைத்துச்செல்லப்பட்டு மாலையில் ஊர்திரும்பினர்.

ஆசிரியர் ராமு உடன் மாணவர்களுக்கு வழிகாட்டியாக தன்னார்வ அமைப்பைச்சேர்ந்த கண்ணன், பிரதீப்குமார் ஆகியோர் உடன் சென்றனர். மலைக்கோட்டையின் வரலாறு குறித்து மாணவர்களுக்கு எடுத்துக்கூறினர்.

இதுகுறித்து ஆசிரியர் ராமு, "இரண்டாம் ஆண்டாக மாணவர்களை அவர்களின் பெற்றோர் சம்மதத்துடன் திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு எனது சொந்த செலவில் அழைத்துவந்துள்ளேன். கிராமப்புற மாணவர்களை பெரும்பாலும் கூலிவேலைக்கு செல்லும் பெற்றோர்கள் வெளியில் அழைத்துச்செல்ல வாய்ப்பில்லை. எனவே, காலாண்டு விடுமுறையில் ஒரு நாள் சுற்றுலாவாக திண்டுக்கல் மலைக்கோட்டைக்கு அழைத்து வந்து காட்டியதில் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆசிரியர் ராமு

ரயிலில் செல்லாத மாணவர்களை எனது சொந்த செலவில் திண்டுக்கல்லில் இருந்து விருதுநகருக்கு ரயிலில் அழைத்துச்சென்று காமராஜர் இல்லத்திற்கு அழைத்துச்சென்றேன்.

வகுப்புக்கள் பாடத்துடன் மட்டும் மாணவர்களை நிறுத்திவிடாமல் அதையும் கடந்து வெளியுலகிற்கும் அழைத்து செல்வதால் அவர்களின் மகிழ்ச்சிக்கு எல்லை இல்லை என்பதை அவர்கள் மூலம் உணர்கிறேன்"என்றார்.

SCROLL FOR NEXT