மத்தியில் பாஜக தலைமையிலான புதிய அரசு அமையவுள்ளதற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் ஷாருக் கான், சேகர் கபூர், அனுபம் கேர், ஷபானா ஆஸ்மி, ஆஷா போன்ஸ்லே, கரண் ஜோகர் ஆகி யோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
நடிகர் ஷாருக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பது: மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பதை இந்த தேர்தல் நிரூபித்துள்ளது. உறுதியான ஒரு தீர்ப்பை மக்கள் அளித்துள்ளார்கள். வலிமையான, முன்னேற்றமடையும் இந்தியாவை நோக்கி நாம் செல்வோம் என்று கூறியுள்ளார்.
“புதிய இந்தியா, புதிய நம்பிக்கை, புதிய எதிர்காலத்துக்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் உறுதியான நடவடிக்கைகள் பலனளிக்கும்’’ என்று பாலிவுட் நடிகரும் இயக்குநருமான சேகர் கபூர் கூறியுள்ளார்.
‘‘நாட்டு மக்கள் அனைவரும் மாற்றத்துக்கு வாக்களித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜகவுக்கும், நரேந்திர மோடிக்கும் மக்கள் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். புதிய அரசு சிறப்பான ஆட்சியைத் தரும்’’ என்று நடிகை ஷபானா ஆஸ்மி கருத்துத் தெரிவித்துள்ளார்.
‘‘மோடியின் வெற்றிதான் இந்த ஆண்டின் முதல் மாபெரும் வெற்றி’’ என்று இயக்குநர் கரண் ஜோகர் கூறியுள்ளார்.