இந்தியாவில் அமையவுள்ள புதிய அரசுடன் இணைந்து இணக்கத்துடன் செயல்பட விரும்புவதாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முடிவு அறிவிக்கப்பட்டபின், இந்தியாவில் புதிய அரசை அமைவது குறித்து நாங்கள் எதிர்நோக்கி உள்ளோம்.
அவ்வாறு அமையும் அந்த புதிய நிர்வாக அரசுடன் அமெரிக்கா நெருக்கமாகவும் இணக்கமாகவும் செயல்படும். நடந்து முடிந்த நாடளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் சிறப்பாக தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றியதற்காக அவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, இந்தத் தேர்தலில் பன்முகத்தன்மை மற்றும் துடிப்பான செயல்பாடுகள் மூலம் தனது ஜனநாயகத் தன்மையை நிலைநிறுத்தியுள்ளது" என்று ஒபாமா கூறியுள்ளார்.
பாஜக வரவேற்பு
ஒபாமாவின் கருத்தை வரவேற்றுள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவதேகர், "உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளும் நிச்சயமாக அமைய இருக்கும் புதிய இந்திய அரசுடன் ஒத்துழைக்கும் என்று நான் நம்புகிறேன். அதேபோல, அமெரிக்க அதிபர் ஒபாமாவின் கருத்து, இந்தியாவின் புதிய அலையை நோக்கி எதிர்ப்பார்த்து இருப்பதாக தெரிகிறது" என்று தெரிவித்தார்.