மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 18) தனித்தனியே கூடி ஆலோசனையில் ஈடுபட உள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளிவரத் தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழுவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் விவகாரக் குழுவும் ஞாயிற்றுக்கிழமை கூடுவதாக அக்கட்சிகள் சார்பில் வெளியான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகளை மதிப்பிடும் இவர்கள், புதிய அரசியல் சூழலுக்கு ஏற்ப தங்கள் உத்திகளை வகுப்பார்கள். எதிர்கால நடவடிக்கை குறித்தும் விவாதிப்பார்கள். இதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுப்பதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவும் மார்ச்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவும் ஜூன் மாத தொடக்கத்தில் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்குப் பிறகு மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத புதிய அரசு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடப்போவதாக இடதுசாரி கட்சிகள் கூறிவருகின்றன. என்றாலும் மக்களவைத் தேர்தலில் மாநிலக் கட்சிகள் மற்றும் இடதுசாரி கட்சிகள் வெற்றி பெறும் இடங்களைப் பொறுத்தே இது சாத்தியமாகும்.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் 23 மாநிலங்களில் 98 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. இக்கட்சி 2004 தேர்தலில் 44 தொகுதிகளை கைப்பற்றியது. ஆனால் கடந்த 2009 தேர்தலில் 16 இடங்களை மட்டுமே வென்றது. இதுபோல் கடந்த தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்களிலும், ஆர்.எஸ்.பி., பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன.