மதவாத சக்திகள் ஆட்சியமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இது வரை 7 கட்டங்களுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளன. மே-7, 12-ம் தேதிகளில் தேர்தல் நடை பெறுகிறது. அதன்பிறகு மே 16-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.
இந்நிலையில் மத்தியில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது யார் என்பது குறித்து இப்போதே பல்வேறு தலைவர்கள் வெவ்வேறு கருத்துகளை வெளி யிட்டு வருகின்றனர். மூன்றாவது அணி ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கலாம் என்று மத்திய அமைச்சர்கள் சல்மான் குர்ஷித், ஜெய்ராம் ரமேஷ் உள் ளிட்ட தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, காங் கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக் காவிட்டால் எதிர்க்கட்சி வரிசையில் அமரலாம், 3-வது அணிக்கு ஆதரவு அவசியமற்றது என்று கூறியிருப் பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
ஆனந்த் சர்மா விளக்கம்
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா டெல்லியில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
மே 16-ம் தேதி வாக்கு எண்ணிக் கைக்குப் பிறகுதான் யாருக்கு எத்தனை இடங்கள் என்பது தெரியவரும். இப்போதே ஏதாவது கருத்து கூற முடியாது.
2004, 2009 மக்களவைத் தேர்தல் களின்போதும் காங்கிரஸுக்கு எதிராக கருத்துக் கணிப்புகள் வெளி யாகின. ஆனால் அந்தத் தேர்தல் களில் காங்கிரஸ் அதிக இடங் களைக் கைப்பற்றி ஆட்சி அமைத் தது. அதுபோல் இப்போதும் காங் கிரஸுக்கு எதிராக கருத்துக் கணிப்புகள் வெளியிடப்படுகின்றன. அவை உண்மைக்குப் புறம் பானவை. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவதூறு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. அதனை முன்கூட்டியே தடுத்து நிறுத்தாதது காங்கிரஸின் தவறு.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
3-வது அணிக்கு ஆதரவு?
பெரும்பான்மை கிடைக்கா விட்டால் எதிர்க்கட்சிகள் வரிசை யில் காங்கிரஸ் அமரலாம் என்று ராகுல் விரும்புவதாகக் கூறப் படுவது குறித்து ஆனந்த் சர்மா விடம் நிருபர்கள் கேள்வி எழுப் பினர். இதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்கவில்லை.
அவர் கூறியதாவது:
நடப்பு மக்களவைத் தேர் தலில் பாஜக பணத்தை வாரி யிறைத்துள்ளது. தனிநபரை மையப்படுத்தி அந்தக் கட்சி தேர்தலை சந்திக்கிறது. மதவாத சக்திகள் ஆட்சியமைப்பதை தடுக்க காங்கிரஸ் உறுதியுடன் செயல் பட்டு வருகிறது. அதுபோன்ற சக்திகள் மத்தியில் ஆட்சியமைக்க அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.
குஜராத் இளம்பெண் வேவு பார்ப்பு விவகாரம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட கமிஷனுக்கு தலைமையேற்க நீதிபதிகள் முன்வர தயங்குகின்றனர் என்று அருண்ஜேட்லி கூறியிருப்பது குறித்து கேட்டபோது ஆனந்த் சர்மா கூறியதாவது:
விசாரணை கமிஷன் தலைவராக நீதிபதிகள் பொறுப்பேற்பதை தடுக்கும் வகையில் அவர்களை மிரட்டும் வகையில் பாஜக தலை வர்கள் பேசி வருகின்றனர். மோடி யின் ஆதரவாளரான அருண் ஜேட்லியும் மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியிருக்கிறார் என்றார்.