வரலாறு!
- வி.எம்.எஸ். சுபகுணராஜன், காட்சிப்பிழை இதழின் ஆசிரியர்,
கடந்த ஏப்ரல் 28-ம் தேதியன்று வெளியான ‘வரலாறு முக்கியம் அமைச்சரே’ கட்டுரை யின் மையக் கருத்தாக்கம் கவனத்துக்குரியது.
கட்டுரையாளர் இரா.திருநாவுக்கரசு (பொருத்தமான பெயர்தான். சைவக் குரவர்களின் கைவரிசைதானே கழுவேற்றம்) போகிற போக்கில் மதுரையில் பல்லாயிரக் கணக்கான சமணர்கள் கழு வேற்றப்பட்டார்கள் என்ற ‘கற்பனையும் புனைவும் கலந்த மொழிபு (narrative)’ வரலாறாக முன்வைக்கப்படுகிறது என்று முழங்குகிறார். அவர் இறுதியாக நிறுவ முனைந்து எச்சரித்திருக்கும் ‘அயல்’
பார்வை வழியாகவே அவரது வாதமும் நிகழ்கிறது என்பதை அவர் அறியத் தவறியிருக்கிறார். சமணர்கள் கழுவேற்றப்பட்டதற்கான ‘அசைக்க முடியாத’ ஆதாரங்களைக் கோரும் அவர் எதனை ஆதாரமாகக் கொள்வார் என விளக்க வேண்டும்.
மதுரையில் கூன்பாண்டியன் ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் கொடுமைக்கான ஆதாரங்கள் மூன்று தரவுகளாக உள்ளன. முதல் தரவு, சுவரோவியங்களும் சிற்பங்களும். முதலில் சமணர்களைக் கழுவேற்றியதை அன்றைய ஆட்சியாளர்கள் வெற்றியாகவே கருதினர். அதனால்தான் அதுகுறித்த ஓவியங்களை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் இருக்கும் சுவர் களில் தீட்டி வைத்துள்ளனர்.
அது தவிர்த்து, சுதைசிற்பங்களாகவும் ஆங் காங்கே காட்சிதருகின்றன. ஆர்வ முள்ள ஆய்வாளருக்கு அவை பாண்டி மண்டலம் முழுவதும் இருப்பது எளிதாகத் தென்படும். இன்றைய அரசியல் நியாயங்களுக்கு அது இழுக்காகும் என்பதெல்லாம் அன்றைய மனிதனின் அக்கறைகள் அல்ல.
இரண்டாவது தரவு, இலக்கியத் தரவு. கந்தர்சஷ்டி கவசங்களில் கொலைக்களத்துக்கு வெகு அருகில் இருக்கும் பழமுதிர்ச்சோலை கவசம் பாடிய தேவராயக் கவிராயர் ‘எண்ணாயிரம் சமணர்களை எதிர்கழுவேற்றி’ எனப் பாடுவார். பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதிய பெரிய புராணம் அல்லது திருத்தொண்டர் புராணம் திருஞான சம்பந்தரின் கீர்த்தியாக இந்தக் கழுவேற்றத்தைப் பற்றிப் பேசுகிறது.
அதில் மதமாற்றம், அதாவது சமணத்திலிருந்து சைவத்துக்கு மாறும்படியான பாண்டி யனின் கட்டளையை ஏற்காத எண்ணாயிரம் சமணர்கள் ஆனைமலை மற்றும் இதர மலைகளிலிருந்து இறங்கிக் கழுவேறினர் என்கிறது. ஞானியான சம்பந்தர் சைவ மடங்களின் நலனுக்காகவே இந்தக் கழுவேற்றத்தை நிறைவேற்றினார் என் கிறது. பெரும்பற்றப் புலியூர் நம்பி எழுதிய திருவிளையாடல் புராணமும், பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணமும் அதைப் பெருமிதமாகவே பேசுகின்றன.
இந்தப் பெருமை பேசாத எந்தச் சைவ உரையாவது உண்டென அவரால் காண்பிக்க இயலுமா? அவரது வரலாறு தொடர்பான ஆட்சேபம் எண்ணிக்கை தொடர்பானது எனத் தோன்று கிறது. வெறும் 700 பேர் அல்லது 70 பேர் கழுவேற்றப்பட்டார்கள் எனக் கூறினால் வரலாறு சரியாகி, குற்றமற்ற தன்மை யையும் புனிதமும் அடைந்துவிடும் போலும்.
மூன்றாவது தரவு, வெகு மக்களின் சடங்குகள் வழியாகக் கைமாற்றப்படும் நினைவு வரலாறு. இது நாட்டார் பாடலாகவும் திருவிழாவின் பகுதியான சடங்காகவும் நிகழும். இன்று வரை மதுரை மேற்கில் இருக்கும் மேலக்காலில் இருந்து கிழக்கில் இருக்கும் திருப்புவனம் வரை சிவன் கோயில் விழாக்களின் பிரிக்க முடியாத அங்கமாக, கழுவேற்றம் என்னும் சடங்கு தவிர்க்க முடியாத வகையில் நிகழ்ந்துவருகிறது.
அது நிகழும் இடம் திருப்புவனத்தில் ‘கழுவேற்றப் பொட்டல்’என்றே இன்றும் அழைக்கப்படுகிறது. இன்னும் மிச்சமாகப் பல்வேறு திருவிழாக்களின் பகுதியான சடங்காக இன்று வரை கழுவேற்றம் என்பது ‘பெருமிதத்துடன்’நிகழ்த்தப்படுகிறது. இதற்குப் பின்னரும் கழுவேற்றம் ‘ஆதாரங் களற்ற புனைவு’ என வாதிட்டால், இந்தப் புராணங்கள் வழியாக ஊர்ஜிதமான ஞான சம்பந்தரும் திருநாவுக்கரசரும் புனைவின் பிறப்புகள்தாமோ என்ற ஐயப்பாட்டுக்கு இட்டுச் சென்றுவிடுமே, என்ன செய்வது.
தொடர்புக்கு: subagunarajan@gmail.com
அப்படிச் சொல்ல முடியாது!
- இரா. திருநாவுக்கரசு, தமிழ்க் கலாச்சாரம் - சமூக அரசியல் ஆய்வாளர்
கழுவேற்றம் பற்றி ஓவியங்கள், இலக்கியங் கள் மற்றும் சடங்குகளில் இன்றுவரை தொடரும் ‘அசைக்க முடியாத ஆதரங்கள்’பற்றி சுபகுணராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இவை ஆதாரங்களா அல்லது நடந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்த ஒரு சாராரின் ஆழ்மன ஆவலின் வெளிப்பாடா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சமணர்களை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற கோபம் தெறிக்கும் சொற்கள் மிக முக்கியமான சைவ நாயன்மார்களின் பாடல்களில் இருக்கத்தான் செய்கிறது. இதை வைத்துக்கொண்டு, மத்திய காலத்தில் கொடூரமான சமயப் போர்கள், அழிவுகள், படுகொலைகள் நடைபெற்றதாகக் கருதுவதற்குப் போதிய முகாந்திரம் இல்லை என்றே வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நவீன காலத்தில், குறிப்பாக 1857-க்குப் பிறகு, சமண வரலாற்றை எழுதியவர்களில் அநேகமாக விதிவிலக்கில்லாமல் அனைவருமே சமண சமயத்தைச் சேராதவர்களே. தமிழ் மொழிப் பற்றாளர்கள், சைவ அபிமானிகள், திராவிட இயக்கச் சார் பாளர்கள் என்று பட்டியல் நீளும். இதன் விளைவுதான், சமணம் பற்றிய நமது பார்வை (பெளத்தத்தையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்) போதாமையைக் கொண்டிருக்கிறது.
மயிலை சீனி. வேங்கடசாமி நாட்டாரின் ‘தமிழும் சமணமும்’ என்ற நூல் (1954) இன்னமும் நமக்கு மிக முக்கியமான ஆவணம். அதைத் தாண்டி, நாம் எவ்வளவு தூரம் ஆய்வு நோக்கில் முன்னகர்ந்திருக்கிறோம் என்று பார்ப்பது அவசியம். தமிழகத்தின் மத்திய கால வரலாற்றை விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர்கள் பெர்ட்டன் ஸ்டெய்ன், டேவிட் லூடன், கரஷிமா, சுப்பராயலு, செம்பகலட்சுமி இன்னும் பலர், ஐரோப்பியர்கள் கட்டமைத்த இந்திய வரலாற்றை நாம் மீறிச் செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியே வந்துள்ளனர்.
சமய நிகழ்வுகளைச் செறிவோடு ஆவணப்படுத்தும் நெடிய பண்பாடுள்ள சமண மதத்தின் மடங்கள் கழுவேற்றம் செய்யப்பட்டுப் பலியிடப்பட்ட சமணர்கள்பற்றி இதுவரை அதிகார பூர்வமாக ஏதேனும் தகவலை வெளி யிட்டுள்ளதா என்று கேட்பதும் அவசியம். போரில் தோற்றால் வடக் கிருந்து உயிர் துறப்பதுபற்றி நமக்குச் சங்க இலக்கியங்களில் நிறைய சான்றுகள் உள்ளன.
அதேபோல, விவாதத்தில் தோற்றாலும் தற்கொலை செய்துகொள்ளும் மரபும் நம்மிடம் இருந்திருக்கிறது. விவாதத்தில் தோற்றவர்கள் தற்கொலை செய்துகொள் ளும் விதம் பலவாறாகவும் இருந் திருக்கலாம்; கழுமரத்தில் அமர்ந் தும் உயிர்துறந்திருக்கலாம். மத்திய காலத்தில் ஐரோப்பாவில் நிகழ்ந்தது போல மத அடிப்படையில் இரு மதப் பிரிவினர் தங்களைக் கொடூரமாகப் பலியிட்டுக்கொண்டனர் என்று உறுதிசெய்வதற்குப் போதிய ஆதாரங்கள் வேண்டும். சமரசத்தை ஒரு தனித்துவமான மார்க்கமாக இங்குள்ள சமயங்கள் பெருமளவு பின்பற்றியிருப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருப்பதாகவே தெரிகிறது.
ஓவியங்களை உறுதியான ஆதாரம் என்று அறுதியிட்டுச் சொல்ல வரலாற்று ஆய்வாளர்கள் தயங்குவதற்கு மிக முக்கியமான காரணம், அதில் இருக்கும் மிதமிஞ்சிய கற்பனாவாதமே. நடந்ததைச் சித்தரிப்பதைவிட, தங்களின் ஆழ்மன ஆவலை, எதிர்பார்ப்பை ஓவியமாக்கும் சாத்தியமும் மிக அதிகமே. இதே பரவலான வரையறையை நாம் சடங்குகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.
இயற்பியல், வேதியியல் போல ஒரு வரலாற்று நிகழ்வுக்கு ஐயமின்றி நிரூபிக்கப்பட்ட ஆய்வு முடிவுகளை அறிவிப்பது எளிதன்று; எனினும், தொல்லியல், மொழியியல், மானுடவியல் மற்றும் உளவியல் துறைகளின் துணைகொண்டு ஒரு கருத்தொற்றுமைக்கு மட்டுமே வர முடியும். ஓர் இனத்தின் கலாச்சார வரலாறு அப்படி மட்டுமே கட்டமைக்கப்படுகிறது. இதில் விவாதம் நிச்சயம் இருக்க வேண்டும்; புதிய சான்றுகள் நமது பார்வையை விசாலமாக்கட்டும்.
தொடர்புக்கு:rthirujnu@gmail.com