தேர்தல் தோல்விக்கான கார ணத்தை ஆராய்வோம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் முடிவு கள் பாஜகவுக்கு சாதகமாக இருந்த தால், சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் தலைமை அலுவல கமான சத்தியமூர்த்தி பவன், வெள்ளிக்கிழமை காலையில் இருந்தே வெறிச்சோடி காணப்பட் டது. மதியம் 12 மணிக்குப் பிறகு ஒரு சில தொண்டர்கள் வந்தனர். அதன்பிறகு அலுவலகத்துக்கு வந்த தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களவைத் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும் ஜனநாயகம் வெற்றி பெற்றுள்ளதாகவே கருதுகிறோம். வாக்குச் சீட்டால் ஆட்சி மாற்றம் நடப்பது மகிழ்ச்சியே. பாஜக உள்ளிட்ட வெற்றி பெற்ற கட்சிகளுக்கு வாழ்த்துகள். குறைந்த இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதால், இந்திய அரசியலில் இருந்து காங்கி ரஸ் ஒதுக்கப்பட்டதாக அர்த்தம் இல்லை. தோல்விக்கான கார ணத்தை ஆராய்ந்து இனி வரும் காலங்களில் அதை காங்கிரஸ் மாற்றிக் கொள்ளும்.
பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற காலம் உண்டு. ஆனால், நாங்கள் இப்போது 60-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம். காங்கிரஸ் கட்சி, 404 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைத்ததும் உண்டு.
பாஜக கூறுவதுபோல் நாடு முழுவதும் அலை வீசவில்லை. ஆனால், பாஜகவின் பிரச்சார வலிமை சிறப்பாக இருந்தது. பிரதமர் வேட்பாளராக இருந்தும்கூட பிரச்சாரக் கூட்டங்களில் மோடி கலந்துகொண்டார். மக்களவையில் எதிர்க்கட்சியாக அமர்ந்து காங்கிரஸ் கட்சி தனது ஜனநாயகப் பணியை ஆற்றும். எங்களுக்கு எந்த சோர்வும் இல்லை. இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.
பின்னர் நிருபர்களின் கேள்வி களுக்கு அவர் அளித்த பதில்கள்:
பாஜக வெற்றிக்கு மோடி அலை காரணமா?
மோடி அலையெல்லாம் வீசவில்லை. பிரச்சார வலிமை பாஜகவிடம் சிறப்பாக இருந் தது. இடத்துக்கு ஏற்றவாறு பிரச் சாரங்களை மேற்கொண்டனர். இதுவே, அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது.
அதிமுக அமோக வெற்றி குறித்து உங்கள் கருத்து?
மக்கள் வாக்களித்ததால் வெற்றி பெற்றுள்ளனர்.
திமுக ஒரு இடம்கூட பிடிக்கவில்லையே?
நாங்களும்தான் ஒரு இடம்கூட பிடிக்கவில்லை.
விலைவாசி உயர்வு, இலங்கை பிரச்சினை உள்ளிட்டவை காங்கிரஸ் தோல்விக்கு காரணமா?
இதுவெல்லாம் எதுவும் காரணம் இல்லை.
இவ்வாறு அவர் பதிலளித்தார்.