இதர மாநிலங்கள்

தனி மெஜாரிட்டி- ஆட்சியைப் பிடித்தது பாஜக: 21-ல் பிரதமர் பதவி ஏற்கிறார் நரேந்திர மோடி

செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 334 தொகுதிகளில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்துள்ளது. தனிப்பெரும்பான்மை பலத்துடன் வரும் 21-ம் தேதி நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்கிறார். விலைவாசி உயர்வு, ஊழல் விவகாரங்களால் காங்கிரஸ் கட்சி இதுவரை இல்லாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மை

1984-ல் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து எழுந்த அனுதாப அலையால் 419 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அதன்பிறகு எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி 244 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது, அப்போதுகூட தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 1999-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக அதிகபட் சமாக 182 இடங்களைக் கைப்பற்றியது.

இதனால் சுமார் 25 ஆண்டுகளாக காங்கிரஸ், பாஜக தலைமையில் கூட்டணி அரசுகள், சிறுபான்மை அரசுகளே மத்தியில் ஆட்சி நடத்தி வந்தன. தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 334 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பாஜக மட்டும் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் பெரும்பான்மையை நிரூபிக்க 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. அந்த எண்ணிக்கையை பாஜக எளிதாக தாண்டியுள்ளது.

மே 21-ல் பிரதமர் ஆகிறார் மோடி

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத்தின் வடோதரா, உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் வடோதரா தொகுதியில் 5 லட்சத்து 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் வாரணாசி தொகுதியில் 2 லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும் மோடி அமோக வெற்றி பெற்றார்.

வரும் 21-ம் தேதி நாட்டின் 15-வது பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்கிறார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காங்கிரஸ் படுதோல்வி

ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அஜய் அகர்வாலை தோற்கடித்தார். அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி போராடி வெற்றி பெற்றுள்ளார்.

நாடு முழுவதும் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக மோசமான தோல்வியை அந்தக் கட்சி தழுவி யுள்ளது.

கேரளத்தில் மட்டுமே காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்துள்ளன. மற்ற மாநிலங்களில் அந்தக் கட்சி பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸுக்கு ஓர் இடம்கூட கிடைக்கவில்லை.

இடதுசாரி, ஆம் ஆத்மிக்கு பின்னடைவு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளன. மேற்கு வங்கத்தில் 34 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அங்கு 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கேரளத்தில் 5 இடங்களை பெற்றுள்ளது.

இதேபோல் டெல்லியில் யாரும் எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்த ஆம் ஆத்மி கட்சி மக்களவைத் தேர்தலில் சறுக்கியுள்ளது. டெல்லியின் 7 மக்களவைத் தொகுதிகளில் ஓர் இடம்கூட ஆம் ஆத்மிக்கு கிடைக்கவில்லை.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், குமார் விஸ்வாஸ் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 4 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ளது.

தமிழகம், மேற்குவங்கம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் மாநில கட்சிகள் வெற்றிக் கனியைப் பறித்துள்ளன.

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் ஆளும் அதிமுக 37 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 34 இடங்களைப் பிடித்துள்ளது. ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் 20 இடங்களைப் பெற்றுள்ளது.

SCROLL FOR NEXT