ஜனநாயகத்தில் யாரும் எதிரிகள் கிடையாது, போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்று நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. அந்தக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியில் 5 லட்சத்துக்கு 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வடோதராவில் வெள்ளிக்கிழமை மோடி பேசியதாவது:
எனது பிரச்சாரத்தின்போது வடோதரா தொகுதிக்காக 50 நிமிடங்களை மட்டுமே ஒதுக்கினேன். இருப்பினும் 5.70 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றி பெறச் செய்துள்ளீர்கள். அதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வரலாற்றில் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றிருப்பது இதுவே முதல்முறை. இந்த சாதனைக்காக இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் பல்வேறு கட்சிகள் சார்பில் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி.க்களை வாழ்த்தி வரவேற்கிறேன். நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்த அவர்கள் எனக்கு முழுஆதரவு அளிப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.
மத்திய அரசு என்பது ஒரு தனிப்பட்ட கட்சிக்கு சொந்தமானது அல்ல. இந்த நாட்டுக்குச் சொந்தமானது. அரசுக்கு வேண்டப்பட்டவர்கள் என்று யாரும் கிடையாது. யாராக இருந்தாலும் வேற்றுநபராகவும் பாவிக்கப்படமாட்டார்கள்.
நமது நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்வதுதான் எனது கடமை. அதனை செவ்வனே நிறைவேற்றுவேன்.
நான் இந்த நாட்டின் முதல் தொழிலாளி. அடுத்த 60 மாதங்களுக்கு உண்மையான உழைப்பாளியாக இருந்து நாட்டை முன்னேற்றுவேன். நீங்கள் என்னை நம்புகிறீர்கள். நான் உங்களை நம்புகிறேன். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியின்போதும் 125 கோடி மக்களும் என்னோடு சேர்ந்து அடியெடுத்துவைப்பார்கள்.
ஜனநாயகத்தில் யாரும் எதிரிகள் இல்லை, போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். அந்தப் போட்டியும் தேர்தலோடு முடிவடைந்துவிடும். பிரச்சாரத்துக்கு பிறகு எவ்வித கசப்புணர்வும் இருக்கக்கூடாது. இதுதான் ஜனநாயகத்தின் சிறப்பியல்பு.
மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது எனது போட்டியாளர்கள் என் மீது காட்டிய “அன்பை” நான் “உண்மை அன்பாக” மாற்றுவேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடியின் வாரணாசி பொதுக்கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது. இதை மறைமுகமாக சுட்டிக் காட்டிய மோடி, எனது மவுனத்துக்கு வாரணாசி மக்கள் பதில் அளித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.