ஜனதா கட்சியிலிருந்து பிரிந்து 1980 ஆம் ஆண்டு பாஜக உதயமானது. 1984 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. 30 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தனிப் பெரும்பான்மை என்ற வளர்ச்சி கண்டுள்ளது.
1977 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, எதிர்கட்சி ஒன்று தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. சுதந்திர இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் எதிர்கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது, இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கப்போகிறது. 1989-ற்குப் பிறகே மத்தியில் கூட்டணி ஆட்சியே நடைபெற்று வந்தது.
1996 ஆம் ஆண்டு பாஜக தலைமையில் முதன் முதலில் ஆட்சி அமைந்தது. ஆனால் அது 13 நாட்களில் கவிழ்ந்தது. பிறகு 1998 ஆம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மூலம் ஆட்சியைப் பிடித்தது; இதுவும் 13 மாதங்களே நீடித்தது. 13 என்ற எண் பாஜகவிற்கு பெரும் அலர்ஜியாகத் தொடங்கியது.
பிறகு 1999 ஆம் ஆண்டு கார்கில் போரை முன் வைத்து மீண்டும் பாஜக தலைமை தேசிய ஜனநாயகக் கூட்டணி அரியணை ஏறியது. இந்தத் தேர்தலில் பாஜக 182 இடங்களைக் கைப்பற்றியது.
1984 ஆம் ஆண்டு பெருத்த எதிர்பார்ப்பிற்கு எதிராக 543 தொகுதிகளில் படுமோசமாக 2 இடங்களையே கைப்பற்றியது காரணம் பிரதமர் இந்திரா காந்தி கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட அனுதாப அலை.
இந்த அனுதாப அலையில் வாஜ்பாயி உள்ளிட்ட தலைவர்களும் பெரும் தோல்விகளைச் சந்திக்க நேரிட்டது. வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்று ஆந்திரா மற்றொன்று குஜராத்.
மாறாக காங்கிரஸ் கட்சி 1999 ஆம் ஆண்டு மிகக்குறைவான 114 இடங்களைக் கைப்பற்றியது. 2014ஆம் ஆண்டு இரட்டை இலக்கத்தில் தேங்கிப் போயுள்ளது.
இந்த இரண்டு பெரும் தோல்விகளுமே காங்கிரஸ் கட்சிக்கு சோனியா தலைமையின் கீழ் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இடதுசாரிகளுக்கும் இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் குறைவான எண்ணிக்கையையே கொடுத்துள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸின் 10 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்ததன் விளைவாகவும், மோடியின் எழுச்சியின் காரணமாகவும் பாஜக மகத்தான வெற்றியை இப்போது நிலைநாட்டி இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.