மேற்கு வங்க மாநிலத்தில் 3,200 வாக்குச் சாவடிகளில் உடனடியாக மறு தேர்தல் நடத்தவேண்டும் என்று கோரி இடதுசாரி கட்சிகள் நேற்று நாடு தழுவிய போராட்டம் நடத்தின.
இதையொட்டி டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரகாஷ் காரத், சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரத்; இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஏ.பி.பரதன், சுதாகர் ரெட்டி, டி.ராஜா; அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேவவரத பிஸ்வாஸ் மற்றும் ஆர்.எஸ்.பி. தலைவர்கள் பங்கேற்றனர்.
இதில் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேசுகையில், “3, 4 மற்றும் 5-ம் கட்ட மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் சுமார் 3,200 வாக்குச் சாவடிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கள்ள வாக்குகள் போட்டுள்ளனர். வாக்காளர்கள் அச்சுறுத்தப்பட்டும், தாக்கப்பட்டும் வாக்களிக்க விடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக பத்திரிகை, தொலைக்காட்சிகளில் செய்தி அறிக்கைகள் வெளியாகியுள்ளன. எதிர்க்கட்சிகளும் பல்வேறு ஆதாரங்களை எடுத்து வைத்துள்ளன. ஆனால் மறு தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை முடிவு எடுக்கவில்லை.
மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது முதல் ஒவ்வொரு தேர்தலில் அக்கட்சியினர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே வரும் மக்களவைத் தேர்தலிலும் முறைகேடுகள் நடக்கலாம் என 2 மாதங்களுக்கு முன்பே தேர்தல் ஆணையத்திடம் கூறினோம். ஆனால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்றார்.
மாக்க்சிஸ்ட் கட்சியின் மற்றொரு தலைவர் சீதாராம் யெச்சூரி பேசுகையில், “கள்ள வாக்குகள் போடப்பட்ட வாக்குச் சாவடிகளின் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் அளித்துள்ளோம். இங்கு ஆணையம் உடனே மறு தேர்தல் நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் நீண்டகால அரசியல் போராட்டத்துக்கு தயாராவோம்” என்றார்.
திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் ஏ.பி.பரதன், டி.ராஜா ஆகியோரும் குற்றம் சாட்டினர். மறு தேர்தல் நடத்த அவர்கள் வலியுறுத்தினர்.