தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ரோஜா, வெள்ளிக்கிழமை வெயில் கொடுமை தாளாமல் மயங்கி விழுந்தார்.
ஆந்திர மாநிலத்தின் சீமாந்திராவில் வரும் 7-ம் தேதி, 175 சட்டமன்றம், 25 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, சீமாந்திராவில் காங்கிரஸ், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கு தேசம், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். தற்போது கோடைகாலம் என்பதால் மாநிலம் முழுவதும் வெயில் வாட்டி எடுத்து வருகிறது. ஆயினும் கட்சியினர் வெயில், மழை போன்றவற்றை பொருட்படுத்தாமல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி வேட்பாளரும் நடிகையுமான ரோஜா, வெள்ளிக்கிழமை காலை முதலே தனது தொண்டர்கள், ரசிகர்களுடன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
நகரியை அடுத்துள்ள ஏகாம்பர குப்பத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது, திடீரென வெயில் தாளாமல் ரோஜா மயங்கி விழுந்தார்.
அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அவரை அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளித்தனர்.